கோவையில் 'டூப்ளிகேட்' ஹெல்மெட் வேட்டை - ஐஎஸ்ஐ முத்திரையில்லாத கடைகளில் பிஐஎஸ் அதிரடி ரெய்டு !!!
பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஹெல்மெட்டுகள்; கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு - சிறை தண்டனை பாயும் என எச்சரிக்கை!
கோவையில் இருசக்கர வாகன ஓட்டிகளின் உயிரோடு விளையாடும் வகையில், ஐ.எஸ்.ஐ (ISI) தர முத்திரையில்லாத போலி ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடைகளில் இந்திய தர நிர்ணய அமைவன (BIS) அதிகாரிகள் ‘திடீர்’ ரெய்டு நடத்தி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கோயம்புத்தூர் பிஐஎஸ் (BIS) அலுவலகத்தின் சார்பில், சந்தைகளில் தரமற்ற மற்றும் ஐ.எஸ்.ஐ முத்திரையில்லாத போலிப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கத் தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள ஒரு பிரபல ஹெல்மெட் விற்பனை கடையில் அதிகாரிகள் ஆய்வை மேற்கொண்டனர்.
பி.ஐ.எஸ் இயக்குனர் கே. ரமேஷ் தலைமையில், அதிகாரிகள் வினித் குமார், திவ்யா, கௌதம் சாந்த் சோனி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இந்த அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகன ஹெல்மெட்டுகளைப் பரிசோதித்ததில், அவை எவ்வித ஐ.எஸ்.ஐ தர முத்திரையும் இல்லாத ‘டூப்ளிகேட்’ ஹெல்மெட்டுகள் என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அங்கு இருந்த தரமற்ற ஹெல்மெட்டுகள் அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர். மேலும், விதிமுறைகளை மீறி பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தரமற்ற ஹெல்மெட்டுகளை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
இது குறித்துப் பேசிய பி.ஐ.எஸ் அதிகாரிகள், "பி.ஐ.எஸ் சட்டம் 2016-ன் பிரிவு 28-ன் படி, ஐ.எஸ்.ஐ முத்திரையின்றிப் பொருட்களை விற்பனை செய்வது கடுமையான குற்றமாகும். இதற்குச் சிறைத் தண்டனை அல்லது பெரும் தொகை அபராதமாக விதிக்கப்படும்" என எச்சரித்தனர். மேலும், "பொதுமக்கள் எந்தப் பொருளை வாங்குவதற்கு முன்பும் அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, ஹெல்மெட் வாங்கும் போது ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். 'BIS CARE' செயலி (App) மூலம் பொருட்களின் தரச் சான்றுகளைச் சரிபார்த்து வாங்குவதே பாதுகாப்பானது" என்றும் அவர்கள் ‘அலர்ட்’ விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: