தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; பிரதமரிடம் கோரிக்கை கடிதம் அளித்த முதல்வர் விஜய் !!!
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேர்முகக் கடிதத்தை வழங்கி உள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (மே 27) பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்த நேர்முகக் கடிதத்தில், சில அரசு விழாக்களின் போது தேசியப் பாடலைப் பாடுவது தொடர்பான, மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 28/01/2026 நாளிட்ட ஆணை எண்: 14/2/2025- குறித்து கனிவான கவனத்தை ஈர்க்க விரும்புவதாகத் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் நாட்டுப்பண் மற்றும் தேசியப் பாடலுக்கு மிக உயரிய மரியாதையை அளித்து வருகின்றனர் எனவும், அனைத்து தேசியச் சின்னங்களுக்கும் உரிய கண்ணியத்தையும், நன்மதிப்பையும் தமிழ்நாடு தொடர்ந்து அளித்து வருவதுடன், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் திகழ்கிறது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில், 'தமிழ்த்தாய் வாழ்த்து' அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறித்து கவனத்திற்குக் கொண்டுவர விரும்புவதாகவும், 1891- ஆம் ஆண்டில் மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட 'தமிழ்த்தாய் வாழ்த்து', தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு வாழ்த்துப் பாடலாகும் என்றும், கடந்த பல்லாண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் அரசு, கல்வி, பண்பாடு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இப்பாடல் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு முறையாக அறிவித்து உள்ளது என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
மேற்சொன்ன உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தொடர்ந்து, வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைமுறையை மக்கள் மாளிகைப் பின்பற்றி வருகிறது என்றும், நாட்டுப்பண் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் இந்த வரிசைமுறை, மாநிலத்தில் நீண்ட காலமாக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக அமைந்து உள்ளதால், தமிழ்நாட்டின் பல்வேறு தரப்பில் இருந்தும் பொதுமக்கள் இடையே பெரும் கவலையையும், எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது என்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.
தமிழ்மொழிப் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலத்தின் வாழ்த்துப் பாடலாகத் தமிழ்நாட்டில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்று உள்ளது என்றும், உள்துறை அமைச்சகத்தின் மேற்படி ஆணையைத் தொடர்ந்து இந்த நடைமுறை சில குறிப்பிட்ட அரசு விழாக்களில் மாற்றப்பட்டு உள்ளது
என்றும், உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் மாநில வாழ்த்துப் பாடலை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடுவதற்கு யாதொரு தடையும் விதிக்கப்படவில்லை எனினும் அண்மைக் காலங்களில் மக்கள் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.
இத்தகைய சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் 28/01/2026 நாளிட்ட ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்கிட ஆவன செய்யுமாறு
கேட்டுக்கொள்வதாகவும், அத்தகைய தெளிவுரை, உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணக்கமாக மாற்றுவதுடன், நிர்வாக ரீதியிலான குழப்பங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மதிப்பு அளிப்பதாகவும் அமையும் என்றும், இவ்விவகாரத்தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர், இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள நேர்முகக் கடிதத்தில் தெரிவித்து உள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: