பெண்களுக்கு எதிராக குற்றம் இழைப்பவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்; தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் !!!
சிறுமிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது என்கவுன்டர் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தென்பகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் எங்களுக்கு அக்கறை உண்டு. புதிய அரசும் தமிழகத்தின் தென்பகுதி மீது அக்கறை காட்ட வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அமைச்சர் ஸ்ரீ நாத், தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவோம் என்று கூறி இருக்கிறார்.
இன்னும் த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் பலர் தாங்கள் எம்.எல்.ஏ ஆனதை நம்ப முடியாமல் இருக்கின்றனர். அவர்களை விமர்சிப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு நாம் அறிவுரை வழங்க வேண்டும். அதேபோல், த.வெ.க எம்.எல்.ஏ-க்கள் தங்களின் தொகுதி என்ன?, தொகுதியின் வரையறை என்ன?, மக்கள் பிரச்சனை என்ன? ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
முன்பு தூத்துக்குடிக்கு வந்தால் அவசரகதியில் கிளம்ப வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இப்போது பிரதமர் மேற்கொண்ட முயற்சியால் இரவு விமான சேவை தூத்துக்குடிக்கு கிடைத்து உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தகைய வளர்ச்சி அடைந்த நகரத்தை துறைமுக நகரமாக மாற்ற இருப்பதாக அமைச்சர் கூறி உள்ளார். மக்கள் அவர்களிடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
விளாத்திகுளம் இளம்பெண் கொலை வழக்கில் தீர்ப்பு இன்று வர உள்ளது. இதுபோன்று குற்ற செயல்களில் ஈடுபடுவர்களை தூக்கில் போட வேண்டும் அல்லது என்கவுன்டர் செய்ய வேண்டும். அவர்கள் வாழ தகுதியே இல்லாதவர்கள். விளாத்திகுளத்தோடு இதுபோன்ற நிகழ்வு முடியும் என்றால், இன்று கோவை, விழுப்புரம் என பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் பதவியேற்ற போது, சிங்கப்பெண் படை அமைக்கப்படும் என்று கூறினார். ஏற்கெனவே குழந்தைகள் மற்றும் பெண்கள் நலவாரியத்தில் 5,300 காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். இதில் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே 1,635 அதிகாரிகள் இருக்கிறார்கள், 244 பெண்கள் காவல் நிலையங்கள் இருக்கின்றன.
இத்தனை அதிகாரிகள் இருந்தும் 'சிங்கப்பெண் படை' உருவாக்கப்பட்டு உள்ளது. இது அதிகார படையாக மாறிவிடக் கூடாது, அது பாதுகாப்பு படையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று பல காவல்துறை அதிகாரிகள் தங்களின் கருத்துக்களை கூறி இருக்கின்றனர். ஆகையால், இவை அனைத்திலும் முதலமைச்சர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று அனைத்து முதலமைச்சர்களும் கூறி வருகிறார்கள். அப்படியானால், உங்களுக்கு வாக்களித்த பெரும்பான்மை மக்களின் ஆதங்கத்தை யார் தீர்ப்பது ? இதை புரிந்து கொள்ள வேண்டும்.
கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பேசும்போது, ஓர் காவல்துறை அதிகாரி சிரித்தபடி பேசுகிறார். அதேபோல், த.வெ.க பெண் அமைச்சரும் சிரித்தபடி பேசுகிறார். இவர்கள் என்ன உணர்வோடு இருக்கிறார்கள்? எனவே புதிய அரசு இன்னும் அதிக விழிப்புணர்வோடு, எச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "மாணிக்கம் தாகூருக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பதவி ஆசையால், த.வெ.க உடன் ஒட்டி கொண்டார். இவர், அ.தி.மு.க-தி.மு.க இணைய பா.ஜ.க வேலை பார்த்தாக கூறுவது கண்டனத்திற்குரியது. ராகுல் காந்தி, கூட்டங்களில் பேசும் போது பா.ஜ.க அரசு இன்னும் ஒரு வருஷத்தில் கவிழும் என்று கூறி வருகிறார். நீங்கள் கனவு காண வேண்டாம். இன்னும் பல ஆண்டுகளுக்கு மோடியே பிரதமர்" என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

0 கருத்துகள்: