திங்கள், 25 மே, 2026

28 சவரன் நகை கொள்ளை : காதலியோடு இளைஞர் அதிரடி கைது !!!

SHARE

 28 சவரன் நகை கொள்ளை : காதலியோடு இளைஞர் அதிரடி கைது !!!

மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 28 சவரன் தங்க நகை மற்றும் இரண்டரை லட்சம் பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் மருமகன், அவரது தோழி மற்றும் ஒரு சிறுமி என மூன்று பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

சென்னை வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் கிழக்கு மாடவீதியை சேர்ந்தவர் சாந்தி (55). இவர் பத்திரப் பதிவு எழுத்தாளர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஹர்ஷவர்த்தினி மற்றும் ஹரணி என இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஹர்ஷவர்த்தினிக்கு திருமணமாகி தனது கணவர் ஆட்டோ ஓட்டுநர் தட்சிணாமூர்த்தியுடன் கீழத்தளத்தில் வசித்து வரும் நிலையில், அதே வீட்டில் மேல் தளத்தில் இரண்டாவது மகள் ஹரணியுடன் சாந்தி வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று (மே 24) சாந்தி மற்றும் அவரது மகள்கள் மூன்று பேரும் வேலைக்குச் சென்ற நிலையில் வீட்டிலிருந்த 28 சவரன் நகை, 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் திருடுபோனது. தனது இரண்டாவது மகள் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த நகை, பணம் மற்றும் முதல் மகளின் நகை என மொத்த சேமிப்பும் காணமல் போன நிலையில் அதிர்ச்சி அடைந்த சாந்தி, வண்டலூர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துவங்கிய போது, அதே குடியிருப்பில் முதல் மகளின் கணவரான தட்சிணாமூர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து போலீசார் தட்சிணாமூர்த்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய பாணியில் விசாரித்தனர்.

அப்போது தட்சிணாமூர்த்தி, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அவரது பெண் தோழி தீபா (29) மற்றும் 15 வயது சிறுமி ஒருவருடன் சேர்ந்து நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். மூவரும் சேர்ந்து திட்டம் தீட்டி, தனது மனைவி, மாமியார், மைத்துனி என யாரும் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அவர்களை வரவழைத்து 28 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இதை அடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 23 சவரன் நகை, 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மீட்டனர். இதை அடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், தட்சிணாமூர்த்தி மற்றும் தீபா ஆகிய இருவரையும் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறுமி மட்டும் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மைத்துனி திருமணத்திற்கு சேர்த்த நகை, பணத்தை பெண் தோழியுடன் திருடிய மருமகன் சிறைக்கு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: