சனி, 30 மே, 2026

அதிகாலையில் வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிப் படுகொலை: போலீசார் தீவிர விசாரணை !!!

SHARE

 அதிகாலையில் வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிப் படுகொலை: போலீசார் தீவிர விசாரணை !!!

வீடு புகுந்து செங்கல் சூளை மேஸ்திரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர் உள்ளிட்ட இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் சேங்காளிபுரம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் மனைவி சுதா, மகன் சுமன் மற்றும் மகள் தியாஸின் உடன் வசித்து வருகிறார். திருமுருகன் செங்கல் சூளையில் மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் திருமுருகன் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டு இருந்து உள்ளார்.

அதிகாலையில் வெளிப்பக்க கதவு தட்டும் சத்தம் கேட்டு உள்ளது. இதனை அடுத்து திருமுருகன் உள்பக்க கதவை திறந்து கொண்டு வெளியில் வருவதற்குள், வெளிப்பக்க கதவை உடைத்து கொண்டு 6 நபர்கள் மது போதையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து உள்ளனர்.

என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் திருமுருகனை அந்த கும்பல் சரமாரியாக வெட்ட தொடங்கி உள்ளது. தடுக்க வந்த அவரது மனைவி சுதாவையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது. தாக்குதலில் திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அடுத்து அந்த கும்பல் அங்கு இருந்து இரு சக்கர வாகனங்களில் தப்பிச் சென்று உள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் குடவாசல் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் திருமுருகன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

படுகாயம் அடைந்த சுதா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா ? அல்லது தொழில் போட்டி காரணமா ? என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதட்டம் காரணமாக அப்பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் திருமுருகனின் உடலை வாங்க மறுத்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனக்கோரியும் அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திருவாரூர் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வோம் என வாக்குறுதி அளித்ததின் பெயரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜா உள்ளிட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் இடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: