கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் ‘போராட்டம்’ ; "விஜய் அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்துவோம்" - சி.ஐ.டி.யு எச்சரிக்கை !!!
முன்னறிவிப்பின்றி 717 கடைகள் மூடப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிப்பு ; அரசுத் துறைகளில் நிரந்தரப் பணி வழங்க ஆட்சியரிடம் மனு !!!
தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு குழுவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழக முதல்வர் விஜய் இரு தினங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் பேருந்து நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றிற்கு அருகில் உள்ள சில்லரை மதுபான விற்பனை கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து பல்வேறு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. கோவையிலும் சுமார் 60 கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழக அரசு எந்த ஒரு முன்னறிவிப்பையும் கொடுக்காமல் தொழிற் சங்கங்களை அழைத்து பேசாமல் இந்த உத்தரவை பிறப்பித்ததால் மதுபான கடைகளில் பணி புரிந்த பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு கண்டிக்கும் விதமாகவும் ஓரிரு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தற்பொழுது மூடப்பட்டு வரும் கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு அரசுத் துறையில் நிரந்தர பணி வழங்கிட வேண்டும், இயங்கி வரும் கடைகளில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும், உடைகின்ற பாட்டில்களுக்கு சேதாரம் வழங்க வேண்டும், காலி அட்டை பெட்டிகளுக்கு உண்டான கழிவுகளை உயர்த்தி வழங்க வேண்டும், காலி பாட்டில்களை திரும்ப பெற ஒப்பந்ததாரரே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும், டாஸ்மாக் கடைகள் அனைத்திற்கும் 100% மின் கட்டணத்தை வழங்கிட வேண்டும், கடைகளுக்கு சரக்கு இறக்கி தருவதற்கு நிர்வாகமே இறக்கு கூலி வழங்க வேண்டும் டாஸ்மாக் சங்கங்களை அழைத்து பேசி ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அதே சமயம் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டாலும் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் தனியார் மனமகிழ் மன்றங்கள் தொடர்ந்து செயல்படுவதாகவும் அதற்கு மட்டும் சலுகை வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளையும் கண்டனங்களையும் பதிவு செய்யும் விதமாக முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேட்டி அளித்த CITU மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, புதிதாக பொறுப்பேற்று உள்ள அரசு எந்த ஒரு முன்னறிவிப்பும் அளிக்காமல் தொழிற் சங்கங்களை அழைத்துப் பேசாமல் அந்த உத்தரவை பிறப்பித்து உள்ளதால் தற்பொழுது பணி புரிந்து வரும் பணியாளர்கள் விலக்கி வைக்கப்பட்டு உள்ளார்கள் என்றார். தற்பொழுது எந்த அரசாணையும் அதற்கு இல்லை என்று கூறிய அவர் முதல்வரின் வாய்மொழி உத்தரவை தான் அதிகாரிகள் அமல்படுத்தி உள்ளார்கள் என்று தெரிவித்தார்.
மூடப்பட்ட கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு இதர அரசு துறைகளில் நிரந்தர பணி வழங்கிட வேண்டும், அரசு மதுபான கடைகளை எக்காரணத்தைக் கொண்டும் தனியாருக்கு தாரை வார்க்க கூடாது, பணி நிரந்தரம், எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் முன் வைப்பதாக தெரிவித்தார்.
முதல்வரின் உத்தரவை தொடர்ந்து தொழிற் சங்கம் சார்பில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதாகவும் நிர்வாக இயக்குனரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தெரிவித்த அவர் அதில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயம் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் மீதமுள்ள மதுபான கடைகளை தொழிற் சங்கமே மூடும் அதனால் அரசிற்கான வருமானம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

0 கருத்துகள்: