த.வெ.க ஆட்சியில் கோவையில் இளைஞர்கள் அட்டூழியம் : நடுரோட்டில் போதை ஆட்டம், பைக் ரேஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் !!!
சிட்ரா மருத்துவமனை அருகே நடுரோட்டில் ஆட்டம்; கவுண்டம்பாளையத்தில் பைக் ‘வீலிங்’ - வீடியோக்கள் வெளியாகிச் சமூக வலைதளங்களில் பரபரப்பு !!!
தமிழகத்தில் புதியதாகத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, கோவையில் நள்ளிரவு நேரங்களில் போதை இளைஞர்களின் அத்துமீறல்களும், பைக் ரேஸர்களின் அட்டகாசங்களும் நாளுக்கு, நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் கிளப்பி உள்ளது.
கோவையில் அண்மைக் காலமாக நள்ளிரவு நேரச் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு சிட்ரா பகுதியிலும், கவுண்டம்பாளையத்திலும் அரங்கேறிய போதை வாலிபர்களின் அட்டகாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
கோவை சிட்ரா பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனைக்குச் சரியாக எதிரே நேற்று நள்ளிரவு வாலிபர்கள் சிலர் மது போதையில் வாகனங்களை நடுரோட்டிலேயே கண்டபடி நிறுத்தி விட்டு, அநாகரீகமான முறையில் கூச்சலிட்டு ஆட்டம் போட்டு உள்ளனர்.
மருத்துவமனைக்கு அவசரமாக வரும் அவசரச் சிகிச்சை வாகனங்கள் மற்றும் நோயாளிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
போதை வாலிபர்களின் இந்த ரகளையைக் கண்டு அந்தப் பகுதி வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் தங்களது வாகனங்களை இயக்கிச் சென்றனர்.
இதேபோல், கோவையின் மற்றொரு முக்கியப் பகுதியான கவுண்டம்பாளையத்தில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் தங்களது பைக்குகளின் சைலன்சர்களை மாற்றி, காதைப்பிளக்கும் சத்தத்துடன் ஆபத்தான முறையில் ‘பைக் ரேஸ்’ (Bike Race) மற்றும் வீலிங் (Wheeling) போன்ற சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலையில் செல்பவர்களின் உயிருக்கு உலை வைக்கும் வகையில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடும் ‘திக் திக்’ செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
கோவையில் நள்ளிரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: