கோவை, பாரதியார் பல்கலைக் கழகத்தை நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழை : எம்.பி.ஏ கட்டிடத்தின் மீது சரிந்த ராட்சத மரம் - தேர்வு விடைத் தாள்கள் அறைக்குள் நீர் கசிவு !!!
கோவையில் நேற்று மாலை பெய்த திடீர் பலத்த மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக, கோவை பாரதியார் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த ராட்சச மரம் கீழே விழுந்தது, விடைத்தாள் அறைக்குள் நீர் கசிவு ஏற்பட்டது.
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது இதனால் பல்கலைக் கழக வளாகத்தின் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து உள்ளன. குறிப்பாக, பல்கலைக் கழகத்தின் பிரதான நுழைவாயில், சுற்றுச்சூழல் அறிவியல் கட்டிடம் மற்றும் எம்.பி.ஏ (MBA) துறை ஆகிய இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் எம்.பி.ஏ கட்டிடத்தின் முதல் தளத்தின் மீது ஒரு பெரிய மரம் அடியோடு சாய்ந்து விழுந்ததில், அதன் கூரைத் தகடுகள் சுக்குநூறாக உடைந்து, மரத்தின் கிளைகள் துறை மண்டபத்திற்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணிக்கு மேல் நடந்ததால், கட்டிடத்திற்குள் மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இருப்பினும், கட்டிடத்திற்குள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பலத்த சேதம் அடைந்து உள்ளன.
இதற்கு இடையே, மாணவர்களின் விடைத் தாள்கள் மிகப்பத்திரமாக வைக்கப்பட்டு உள்ள தேர்வுப் பிரிவு கட்டிடத்தின் அறையிலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு உள்ளன. இதனால் விடைத்தாள்கள் ஏதேனும் வேதமடைந்து உள்ளதா ? என்ற அச்சம் மாணவர்கள் இடையே எழுந்து உள்ளது.
இந்த சூழல் குறித்துப் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆர். ராஜவேல் அவர்களிடம் கேட்டபோது,
இன்று சனிக்கிழமை காலை முதலே பல்கலைக் கழக வளாகத்தில் போர்க்கால அடிப்படையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும், விழுந்த மரங்களால் கட்டிடங்களுக்கு ஏற்பட்டு உள்ள கட்டமைப்புச் சேதங்கள் மற்றும் தேர்வுத் துறை கசிவுகள் குறித்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, உரிய தற்காப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்து உள்ளார்.

0 கருத்துகள்: