டாஸ்மாக் கடைக்கு கலெக்டர் அளித்த அனுமதி ரத்து - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு !!!
பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடைக்கு அனுமதித்த கலெக்டரின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூரில் டாஸ்மாக் கடை அமைக்க ஆட்சேபனை தெரிவித்தும், மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்ததாக ரவிச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் 'பெருமகளூர் நேதாஜி நகரில் டாஸ்மாக் கடைக்கு அனுமதி அளிக்க ஆட்சேபனை தெரிவித்து இருந்தோம். இருப்பினும், கலெக்டர் அனுமதி அளித்து உள்ளார். அவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்நோக்குடன் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், 100 மீட்டருக்குள் வழிபாட்டுத் தலம், பள்ளி ஏதும் இல்லை என பரிசீலித்த பின்பே அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆட்சேபனைகளை பரிசீலித்தே கலெக்டர் அனுமதி வழங்கினார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கலெக்டர் அளித்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்த தகவலின்படி, மது அருந்துவோர் புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பாடி டாஸ்மாக் கடைக்கு சென்று திரும்பும் போது விபத்துகள் நிகழ்கின்றன. கடையை பெருமகளூரில் அமைக்க வேண்டும் என மாதர் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அதன் பின்னர், தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த காரணத்தினால் அங்கு கடை அமைக்க டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அளித்த மனுவின் மீது ஆட்சேபனைகளை கேட்டு விசாரணை நடத்த டி.ஆர்.ஓ-வை கலெக்டர் நியமித்தார். அவரிடம் இருந்து பெறப்பட்ட வாய்மொழி வார்த்தையில் அடிப்படையில் கலெக்டர் அனுமதி அளித்தது தெரியவந்தது.
இதனை குறிப்பிட்ட நீதிபதி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மனுவின் அடிப்படையிலேயே கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். டி.ஆர்.ஓ-விடம் இருந்து எழுத்து பூர்வமாக இல்லாமல் வாய்மொழியாக பேசியதன் அடிப்படையில் கலெக்டர் முடிவெடுத்தது முற்றிலும் சட்டவிரோதம் என கூறினார்.
மேலும், மாதர் சங்கம் மனுவில் தெரிவித்த விவரங்கள் குறித்து விசாரிக்கையில், வழிப்பறி சம்பவங்கள் பதிவாகவில்லை என்றும், அங்கு நடைபெற்ற சில விபத்துகள் மது அருந்தி திரும்பும் நபர்களுடன் தொடர்புடையவை அல்ல என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கலெக்டரிடன் முன் தவறான காரணங்களை சமர்ப்பித்தாக தெரிவித்த நீதிபதி, அவசரகதியில், விதிமுறைகளை கருத்தில் கொள்ளாமல் மது விற்பனையை மட்டுமே கருத்தில் கொண்டு முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மதுபானம் விற்கலாம்; ஆனால் சுயமரியாதை, மனசாட்சியை விற்க முடியாது என அதிருப்தி தெரிவித்தார்.
மேலும், டாஸ்மாக் கடை துவக்க கலெக்டர் வழங்கிய அனுமதி ரத்து செய்ததுடன், அக்கடையை உடனே மூட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.
தொடர்ந்து, விசாரணைக்கென கலெக்டர் நிர்ணயிக்கும் தேதியில் மனுதாரரோ அல்லது ஆட்சேபனைகளை சமர்ப்பித்து உள்ள மற்றவர்களும் ஆஜராக வேண்டும் எனவும், அவர்கள் முன் வைத்த கருத்துகளை முறையாக விசாரித்து இதில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து இறுதி உத்தரவை பிறப்பக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: