ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் விஜய் குரல் கொடுக்க வேண்டும் - இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனன் !!!
தமிழக முதலமைச்சர் விஜய், இலங்கை தமிழர்களின் போராட்டம் மற்றும் தமிழ் ஈழ மக்கள் தொடர்பான பிரச்சனைகளில் ஆழமாக சிந்தித்து, ஆறுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
தமிழகம் வந்து உள்ள இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ஜுனன், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"என் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறேன். தமிழ் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் இனத்தைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்டது, இந்த மாதத்தில் தான்.
இந்த மாதத்தில் தமிழ் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான், தமிழ் மக்களின் வலிகளை உலகெங்கும் உள்ள உறவுகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய தேவை உள்ளது. அதனால் நான் தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கிறேன்.
உண்மையிலேயே முதல்வர் விஜய் மற்றும் அவருடைய அமைச்சர்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கை இருக்கவில்லை. அவர் முதல்வராக பதவியேற்ற நாளில் நான் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தேன்.
எங்கள் இனத்திற்காக போராடிய குட்டிமணி, தங்கதுரை ஆகியோர் சிறையில் கொலை செய்யப்படுவதற்கு முன், இந்த கண்களை தோண்டினால் அதை இன்னொரு தமிழனிடம் கொடுத்து விடுங்கள். அந்த தமிழனின் வழியாக சுதந்திர தமிழ் இனத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என கூறி இருந்தனர்.
தமிழ்நாட்டு மக்கள் வரலாறு காணாத மிகப் பெரிய மாற்றத்திற்கு வாக்களித்து இருக்கிறார்கள். இந்த மாற்றத்தை தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே நான் இலங்கையில் கூறி இருந்தேன். உண்மையாகவே எதார்த்த அரசியலை வழி நடத்தும் மக்கள் ஜனநாயகனான முதலமைச்சர் விஜய்யின் சேவை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ் பேசும் ஒவ்வொருவருக்கும் முக்கியமானது.
குறிப்பாக 40 ஆண்டு காலம் போராடி, சிதைக்கப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்ட ஈழ விடுதலை இனத்திற்காக தமிழக முதல்வர் விஜய்யின் குரல் மிகவும் அவசியமானது. தமிழ் ஈழ மக்களின் சார்பில் தமிழக முதல்வர் விஜய்க்கு வைக்கப்படும் வேண்டுகோள் என்னவென்றால், உங்கள் குரலும், உங்கள் நியாயமான நடவடிக்கைகளும் அவசரப்படாமல் ஆழமாக யோசித்து, ஆறுதல் தரும் வகையில் இருக்க வேண்டும் என்பது தான்.
நான் அரசியலுக்கு புதியவன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பு ஆட்சி செய்த தி.மு.க அரசாக இருந்தாலும், அ.தி.மு.க அரசாக இருந்தாலும், இலங்கையில் எங்கள் இனம் அழிக்கப்பட்ட போது அதை வேடிக்கை பார்த்ததை நான் பார்த்து இருக்கிறேன். அந்த நேரத்தில் தற்போதைய முதல்வர் விஜய் எங்களுக்காக உண்ணாவிரதப் போராட்டங்களை மேற்கொண்டார். அவர் மட்டுமல்ல, பல அரசியல்வாதிகள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தார்கள்.
இலங்கையில் இனப்படுகொலை நடந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. அதைப்பற்றிய பேச வேண்டிய நேரம் இதுவல்ல. எங்கள் முக்கிய நோக்கம், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.
எங்களை பொறுத்த வரை, இந்திய அரசு எங்களுக்கு நியாயம் பெற்றுத் தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்திய அரசு எப்போதும் சிங்கள அரசுக்கு ஆதரவாகத் தான் நிற்கும். எனவே, தமிழக அரசிடம் தான் நாங்கள் கோரிக்கை வைப்போம்.
தமிழக மக்கள் எங்கள் வலியை புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் வலியை விற்பனை செய்பவர்களையும் தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆரம்ப காலங்களில் எங்கள் வலியைப் பற்றி பேசினார். ஆனால், தற்போது தமிழ்நாட்டு அரசியலுக்காக எங்கள் வலியை விற்பனை செய்வதாக நம்புகிறேன். தமிழக மக்களும் அவரை பற்றி தெரிந்து கொண்டதால் தான் அவருடைய கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
ராமேஸ்வரத்திற்கு வந்த புலம்பெயர் தமிழர்களுக்கு சீமான் உணவு தந்ததாக வரலாறு இல்லை. ஆனால், வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் இருந்து கோடிக் கணக்கான ரூபாயை தனது அரசியலுக்காக அவர் பெற்று இருக்கிறார். பணம் வாங்கியும், அவர் இலங்கை தமிழர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.
எங்கள் தலைவர் பிரபாகரனை சீமான் சந்தித்து இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படியே சந்தித்து இருந்தாலும் ஓரிரு நிமிடங்கள் அந்த சந்திப்பு நடத்து இருக்கலாம். அவர் துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி கொடுத்தார்; மான் கறி கொடுத்தார்; ஆமைக்கறியை வற்றல் போட்டு வீட்டுக்கு கொடுத்து அனுப்பினார் என்பதெல்லாம் சாத்தியக் கூறு இல்லாத விஷயம். சீமான் சொல்வது போல் 50 கிலோ அளவுக்கு வற்றல் போட்டுக் கொடுக்க வேண்டுமெனில் போராளிகள் 6 மாதங்கள் போரிடுவதை நிறுத்தி விட்டு, ஆமை பிடிக்கச் சென்று இருக்க வேண்டும்.
சீமானுடன் வந்தவர்களுக்கும் அதே அளவு ஆமைக் கறி கொடுத்து இருந்தால் யாழ்ப்பாணத்தை சுற்றிலும் கடலில் ஆமையே இருந்து இருக்காது. ஒருவேளை, சாப்பிடும் போது ஒரு துண்டு ஆமைக்கறி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: