வெள்ளி, 29 மே, 2026

ஒரு பிஞ்சுக்காக ஏற்றிய மெழுகுவர்த்தி ; முதியோர் காப்பகத்தில் இருந்த தாயை மகனுடன் சேர்த்த சம்பவம் - கோவையில் ‘ஈரநெஞ்சம்’ நெகிழ்ச்சி !!!

SHARE

 ஒரு பிஞ்சுக்காக ஏற்றிய மெழுகுவர்த்தி ; முதியோர் காப்பகத்தில் இருந்த தாயை மகனுடன் சேர்த்த சம்பவம் - கோவையில் ‘ஈரநெஞ்சம்’ நெகிழ்ச்சி !!!

​‘அஞ்சலி ஒளியில் கிடைத்த அசல் முகவரி’: சின்ன தடாகம் மூதாட்டியை ஆவணங்களுடன் மீட்டெடுத்த மகன் !!!

கோவை சிறுமி படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, ‘ஈரநெஞ்சம்’ ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்திய மௌன அஞ்சலி நிகழ்வு, ஒரு நெகிழ்ச்சியான மனிதநேய சம்பவத்திற்கும் காரணமாகி உள்ளது.

அந்த அஞ்சலி நிகழ்வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. அந்தப் படங்களில் இடம்பெற்றிருந்த 70 வயதான சுமித்ரா என்ற மூதாட்டியை பார்த்து, அவரது மகன் விஜயகுமார் தனது தாயை அடையாளம் கண்டு உள்ளார்.

இதையடுத்து அவர் உடனடியாக ‘ஈரநெஞ்சம்’ காப்பகத்திற்கு வந்து, “இவர் என் தாயார்” என தெரிவித்ததுடன், அதற்கான உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்தார். பின்னர் தனது தாயை அழைத்துச் சென்றார்.

சின்ன தடாகம் பகுதியைச் சேர்ந்த சுமித்ரா அவர்கள், கடந்த 07.02.2026 அன்று காவல்துறை உதவியுடன் ‘ஈரநெஞ்சம்’ காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அவர் தனது முழுமையான முகவரி மற்றும் குடும்ப விவரங்களை சரிவர தெரிவிக்க முடியாத காரணத்தால், காப்பகத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வந்தார்.

அவருக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் ‘ஈரநெஞ்சம் அறக்கட்டளை’ தொடர்ந்து செய்து வந்தது.

தனது தாயை பாதுகாப்பாக பராமரித்து கவனித்து வந்த ‘ஈரநெஞ்சம்’ காப்பகத்திற்கு விஜயகுமார் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ஒரு பிஞ்சு குழந்தைக்காக கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய முதியோர்களின் அந்த மனிதநேய தருணமே, இன்னொரு தாயை அவரது குடும்பத்துடன் மீண்டும் இணைத்திருக்கிறது என்பது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.



~ ஈரநெஞ்சம் அறக்கட்டளை

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: