H" டிராக்கில் ஓட்டினால் மட்டுமே லைசென்ஸ் : கோவை மத்திய RTO-வின் அதிரடி ஆக்ஷன்... 2 வாரமாக ஒருவர் கூட பாஸ் ஆகவில்லை !!!
பிற அலுவலகங்களில் இடைத்தரகர்கள் மூலம் உரிமம் பெற 'ரூட்' மாறும் அவலம்... விபத்துகளைத் தடுக்க அனைத்து ஆர்.டி.ஓ-க்களிலும் இந்த நடைமுறையைக் கொண்டு வரக் கோரிக்கை !!!
கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (Central RTO), ஓட்டுநர் உரிமம் (Driving Licence) பெறுவதற்கான தகுதித் தேர்வில் "எச்" (H) வடிவ டிராக்கில் காரை சரியாக ஓட்டி காண்பித்தால் மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என்ற புதிய கடினமான நடைமுறை கடந்த இரண்டு வாரங்களாகத் தீவிரமாகப் படுத்தப்பட்டு வருகிறது.
போக்குவரத்துத் துறையின் இந்த அதிரடி சோதனையின் காரணமாக, கடந்த 14 நாட்களாகத் தேர்வில் பங்கேற்றவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை (All Fail) என்ற அதிரடித் தகவல் வெளியாகி உள்ளது.
கோவை மாநகரில் நாளுக்கு நாள் பெருகி வரும் வாகனப் போக்குவரத்து மற்றும் கவனக்குறைவால் ஏற்படும் சாலை விபத்துகளை அக்குவேறாகக் குறைக்கும் நோக்கில், ஓட்டுநர் தகுதித் தேர்வுகளை மிகவும் துல்லியமாகவும், தரமாகவும் நடத்தப் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காரை பின்னோக்கி (Reverse) எடுப்பது, வளைவுகளில் கச்சிதமாகத் திருப்புவது போன்ற திறன்களைச் சோதிக்கும் "H" வடிவ டிராக் சோதனை மிகவும் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சற்றுத் தடுமாறினாலும் கார் டிராக்கின் எல்லைக் கோட்டை முட்டிவிடும் என்பதால், கடந்த இரண்டு வாரங்களாக இந்தத் தேர்வில் கலந்து கொண்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர் கூட "பாஸ்" மார்க் வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று உள்ளனர்.
இந்த நடைமுறையால் அதிர்ச்சி அடைந்த சிலர், குறுக்கு வழியில் ஓட்டுநர் உரிமம் பெறத் திட்டம் தீட்டி, கோவை மத்திய RTO-வை புறக்கணித்து விட்டு, இந்த நடைமுறை இன்னும் தீவிரப்படுத்தப்படாத பிற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.
அங்கு உள்ள சில "இடைத்தரகர்கள்" (Brokers) மற்றும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்களைப் பிடித்து, தங்களுக்கு வண்டி ஓட்ட ஒழுங்காகத் தெரியாவிட்டாலும், காசு கொடுத்து எப்படியாவது லைசென்ஸை வாங்கி விடுகின்றனர்.
அரைகுறையாக வண்டி ஓட்டத் தெரிந்தவர்களுக்கு இவ்வாறு எளிதாக ஓட்டுநர் உரிமம் கிடைப்பதால், அவர்கள் பிரதான சாலைகளுக்கு வரும் போது நிலைதடுமாறி விபத்துகளை ஏற்படுத்தி, பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் அவல நிலை தொடர் கதையாகி வருகிறது.
எனவே, இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், சாலை விபத்துகளற்ற தமிழகத்தை உருவாக்கவும், கோவை மத்திய RTO-வில் பின்பற்றப்படும் இந்த "H" வடிவ டிராக் தேர்வு மற்றும் கறாரான ஓட்டுநர் சோதனையை, தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் (All RTO Offices) உடனே கட்டாயமாக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தமிழகப் போக்குவரத்துத் துறைக்குக் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

0 கருத்துகள்: