செவ்வாய், 16 ஜூன், 2026

கல்லூரி மாணவனை அறைக்குள் பூட்டி சிறைவைத்து கத்திமுனையில் கொடூர தாக்குதல் ; 2 பவுன் நகை, பைக் பறித்துச் சென்ற 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு !!!

SHARE

 கல்லூரி மாணவனை அறைக்குள் பூட்டி சிறைவைத்து கத்திமுனையில் கொடூர தாக்குதல் ; 2 பவுன் நகை, பைக் பறித்துச் சென்ற 3 பேர் கும்பலுக்கு வலைவீச்சு !!!

கோவை, குனியமுத்தூர் பகுதியில் புதிய வாடகை அறை தேடிச் சென்ற கல்லூரி மாணவர் ஒருவரை, ஒரு கும்பல் அறைக்குள் வைத்து பூட்டி, கத்தி மற்றும் இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கி, நகை மற்றும் மோட்டார் சைக்கிளைக் கொள்ளை அடித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் வேம்பகோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆர்.கேசவன் (வயது 19). இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள  கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக குனியமுத்தூர் பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்த கேசவன், கடந்த 10 நாட்களாக தனியாக தங்குவதற்கு ஒரு புதிய வாடகை அறை தேடி அலைந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கேசவனுக்கு அறிமுகமான தரணிஷ் என்ற வாலிபர், குனியமுத்தூர் இ.பி. காலனி வாடகை அறை இருப்பதாகக் கூறி அங்கு வருமாறு அழைத்துள்ளார். அதனை நம்பி கேசவனும் அந்த அறைக்குச் சென்று உள்ளார்.

அவர் அறைக்குள் நுழைந்தவுடன், அங்கு ஏற்கனவே மறைந்திருந்த குனியமுத்தூரைச் சேர்ந்த ஆகாஷ் என்கிற  சலகா, பாண்டி மற்றும் அவர்களது கூட்டாளிகள் 3 பேர் திடீரென அறையின் கதவை உள்பக்கமாகப் பூட்டினர். பின்னர் கேசவனை ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர். கேசவன் பணம் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த ஆகாஷ் இரும்பு கம்பியால் அவரது முதுகில் சரமாரியாக தாக்கினார். மற்றொரு நபரான பாண்டி என்பவர் கத்தியை எடுத்து கேசவனின் தோள் பட்டை மற்றும் முதுகுப் பகுதியில் குத்தி கொடூர காயம் ஏற்படுத்தினார்.

வலி தாங்க முடியாமல் அலறிய கேசவனின் கழுத்தில் கத்தியை வைத்த கொள்ளைக் கும்பல், அவர் அணிந்து இருந்த 2 பவுன்  தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டது. அத்துடன் நிறுத்தாமல், கேசவனை சட்ட விரோதமாக அந்த அறைக்கு உள்ளேயே அடைத்து வைத்து, பைக்கை பறித்தனர். மேலும், கேசவனை விடுவிக்க வேண்டுமானால் உடனடியாக அவனது குடும்பத்தினரிடம் பேசி ரூ.2 லட்சம்  பணம் வாங்கித் தர வேண்டும் என மிரட்டி பிணைக்கைதியாக சிறை வைத்தனர்.

நேற்று கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பணம் பறிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வெளியே சென்றனர். அந்த சமயத்தில், உயிருக்கு பயந்த கேசவன் எப்படியாவது தப்பிக்க எண்ணி, அறையின் முதல் மாடி ஜன்னல் வழியாக கீழே குதித்தார். அப்போது அங்கு இருந்த சிமெண்ட் மேற்கூரை சீட்டுகள் உடைந்து சரிந்ததில் கேசவனுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும் விடாத கொள்ளைக் கும்பல், சத்தம் கேட்டு ஓடிவந்து, காயம் அடைந்த கேசவனை மீண்டும் மிரட்டி, அவரிடம் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டது.

இதுகுறித்து கேசவன் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சலகா என்கிற ஆகாஷ், பாண்டி உள்ளிட்ட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: