பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை, ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற தாய் உள்பட 6 பேர் கைது !!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜபினா. இவர் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் ஜபினாவிற்கும் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. யாசகம் பெற்று வாழ்ந்து வரும் தன்னால் இரண்டு பெண் குழந்தைகளை காப்பாற்ற முடியாது என நினைத்த ஜபினா, பிறந்த குழந்தையை விற்க முடிவு செய்து உள்ளார்.
அதற்காக, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவரை நாடி உள்ளார். அவரும் ஜபினாவிற்கு உதவ முன்வரவே, இருவரும் சேர்ந்து, வேலூரைச் சேர்ந்த இடைத்தரகரான புகழேந்தி என்பவரை அணுகி உள்ளனர். அவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த உமாதேவி என்பவரை தொடர்பு கொண்டு குழந்தையை விற்பனை செய்வது குறித்து பேசி உள்ளார்.
உமாதேவியின் வழிகாட்டுதலின் பேரில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் - ஹர்மி என்ற தம்பதியினருக்கு குழந்தை ரூ. 1 லட்சத்திற்கு விற்றுள்ளனர். இந்த தம்பதிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. குழந்தையை விற்றபிறகு, ஜபினா மனம்மாறி ரஷீத்திடம் சென்று, தனது குழந்தையை திருப்பி தரும்படி கூறி உள்ளார். ஆனால் ரஷீத் குழந்தையை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளார்.
பின்னர் இதுகுறித்து அறிந்த, திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத்துறை அலுவலர், இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
புகாரின் பேரில் ரஷீத், புகழேந்தி, உமா தேவி ஆகியோரையும், குழந்தையை விற்ற குற்றத்திற்காக ஜபினாவையும், குழந்தையை வாங்கிய குற்றத்திற்காக, சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஹர்மி ஆகிய 6 பேரையும் உமராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட காவல்துறையினர், 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: