கோவை பீளமேடு நேருநகரில் பரபரப்பு : பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகை கொள்ளை - சாவியை ஜன்னல் வழியாக எடுத்து கைவரிசை காட்டிய மர்ம நபர் !!!
கோவை, பீளமேடு பகுதியில் பூட்டிய வீட்டின் கதவை, ஜன்னல் வழியாக சாவியை எடுத்து திறந்து, 30 பவுன் தங்க நகைகளை மர்ம நபர் கொள்ளை அடித்துச் சென்ற துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பீளமேடு நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (வயது 62). இவர் அந்த பகுதியில் சொந்தமாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு குப்புசாமி வீட்டிற்கு வந்து உள்ளார்.
பின்னர், இரவில் வீட்டின் உள்பக்க கதவை பூட்டிய அவர், சாவியை கதவிலேயே வைத்து விட்டு தனது மனைவியுடன் படுக்கை அறைக்குச் சென்று தூங்கி உள்ளார்.
நள்ளிரவு நேரத்தில், நைசாக வீட்டிற்குள் நுழைய முயன்ற மர்ம நபர் ஒருவன், கதவின் அருகில் இருந்த ஜன்னல் வழியாக கையை விட்டு, கதவில் மாட்டி இருந்த சாவியை எடுத்து உள்ளான். பின்னர், அந்த சாவியைக் கொண்டே வீட்டின் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து உள்ளான்.
வீட்டிற்குள் புகுந்த அந்த மர்ம நபர், பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த 30 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு, யாருக்கும் சத்தம் கேட்காதவாறு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இன்று காலை சுமார் 5 மணி அளவில் குப்புசாமி வழக்கம் போல் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து பார்த்து உள்ளார். அப்போது பீரோ கதவு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பதற்றத்துடன் பார்த்த போது, பீரோவில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியில் உறைந்த குப்புசாமி, இதுகுறித்து உடனடியாக பீளமேடு போலீஸ் ஸ்டேசனில் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் மர்ம நபர் கைவரிசை காட்டிய இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
"முதற்கட்ட விசாரணையில், சாவியை கதவிலேயே விட்டுச் சென்றதை நள்ளிரவில் நோட்டமிட்ட நபர் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்து உள்ளது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பீளமேடு நேருநகர் பகுதியில், ஜன்னல் வழியாக சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: