திங்கள், 22 ஜூன், 2026

விரைவில் சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில்: அமராவதி வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும் !!!

SHARE

 விரைவில் சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில்: அமராவதி வழித்தடத்தில் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும் !!!

சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் சேவைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ள நிலையில், இது ஆந்திரா தலைநகர் அமராவதி வழித் தடத்தில் இயங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை - ஹைதராபாத் இடையேயான மொத்தம் 760.09 கி.மீ. தொலைவை, வெறும் 2 மணிநேரம் 55 நிமிடங்களில் இந்த புல்லட் ரயில் கடக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் தேவைக்கு ஏற்ப, பொதுப் போக்குவரத்து இல்லை என்பது நீண்ட கால பிரச்னையாக இருக்கிறது. எனவே, பயணிகள் ரயில், பேருந்துகளை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய - மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

அதே போல, ஐ.டி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் நிறைந்து உள்ள பெரு நகரங்களுக்கு இடையே நாள்தோறும் லட்சக் கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

எனவே, அந்த நகரங்களுக்கு இடையேயான பயண தூரத்தை குறைக்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, அதிவேக புல்லட் ரயில் திட்டங்களை செயல்படுத்தும் பணிகள் துரிதம் அடைந்து உள்ளன.

குறிப்பாக, சென்னை - ஹைதராபாத், சென்னை - பெங்களூர் வழித் தடங்களில் புல்லட் ரயில் சேவையை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதில், சென்னை - ஹைதராபாத் இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகளுக்கான திட்ட வரைவு இறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

முதலில், இந்த புல்லட் ரயிலுக்கான பாதை, ஆந்திர தலைநகர் அமராவதியை கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில், குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரவேலா கிராமத்தை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.

ஆனால், அவ்வாறு பாதை அமைத்தால், அது ஆந்திரா தலைநகர் அமராவதி மற்றும் விஜயவாடாவில் இருந்து வெகுதூரத்தில் இருக்கும் என கவலை தெரிவித்த தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனம் (NHSRCL), மீண்டும் முந்தைய திட்ட வரைவையே முன்மொழிந்து உள்ளது.

எனவே, இந்த திட்ட வரைவு கிட்டத்தட்ட இறுதியாகி விடும் என்பதால், அமராவதி வழியாகவே சென்னை - ஹைதராபாத் புல்லட் ரயில் செல்வதற்கான இருப்புப் பாதை அமைக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த புல்லட் ரயிலுக்கான வழித்தடம் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளது. சென்னை - ஹைதராபாத் இடையேயான மொத்த தூரம் 760.09 கி.மீ. ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் 61.23 கி.மீ-க்கு தண்டவாளம் அமைக்கப்பட உள்ளன. அதேபோல, திருவள்ளூர், மீஞ்சூர், சென்னை சென்ட்ரல் என 3 ரயில் நிலையங்கள் இங்கு இருக்கும்.

ஆந்திராவில் 518.54 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்பட உள்ளன. திருப்பதி, குடுர், நெல்லூர், காவாலி, ஓங்கோல், சீராளா, குண்டூர், அமராவதி, தச்சேபள்ளி என 9 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

தெலங்கானாவில் 180.32 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைய உள்ள நிலையில், வடபள்ளி, ஹாலியா, ட்ரைபோர்ட், பாரத் சிட்டி, சம்சாபாத், ஹைதராபாத் என 6 ரயில் நிலையங்கள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல, அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் 13 மணி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.

ஆனால், இந்த புல்லட் ரயில் மணிக்கு 300 முதல் 350 கி.மீ. வேகத்தில் செல்வதால், சென்னை - ஹைதராபாத் இடையேயான பயண நேரம் வெறும் 2 மணி நேரம் 55 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: