கோவையில் ‘எம்.எல்.எம்’ மோசடி விபரீதம்: தொழில் நஷ்டம், கடன் தொல்லையால் 60 வயது வீடியோகிராபர் விஷம் குடித்து தற்கொலை !!!
‘யார் ஏமாற்றினார்கள் ?’ என மரண வாக்குமூலக் கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு !!!
கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டியில் கடன் பிரச்சினை மற்றும் தொழில் நஷ்டம் காரணமாக 60 வயது வீடியோகிராபர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிருந்தாவன் நகரில் வசித்து வந்தவர் ராமசாமி மகன் கோவிந்தராஜ் (60). இவரது மனைவி சித்ரா(53). கோவிந்தராஜ் போட்டோ மற்றும் வீடியோ எடுக்கும் தொழில் செய்து வந்த இவர், எம்.எல்.எம். தொழிலிலும் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தொழிலில் பலர் அவரை ஏமாற்றியதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், பல இடங்களில் கடன் வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது. யார் யாரிடம் கடன் வாங்கினார், யார் யார் ஏமாற்றினார்கள் என்பதை அவர் எழுதி வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி சித்ரா (53) அளித்த புகாரின் அடிப்படையில் கருமாதம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சித்ரா தனது அம்மாவைப் பார்க்க கடந்த 20-ம் தேதி சிங்காநல்லூர் சென்றிருந்தார். சம்பவத்தன்று காலை 7 மணியளவில் அவரது கணவர் வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. அருகில் வசிக்கும் செல்வகணேஷ் என்பவர் கோவிந்தராஜுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை சித்ராவுக்கு தெரிவித்தார். உடனடியாக வீட்டுக்கு வந்த சித்ரா தனது கணவர் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது பற்றி கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வு பரிசோதனைக்காக சிங்காநல்லூர் அரசு இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி வழக்கு பதிவு செய்தனர்.

0 கருத்துகள்: