4 மணி நேரம் தொடர் மின்வெட்டு: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் !!!
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர், நாகூர் மீரான் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதியில் தினந்தோறும் 4 மணிநேரம் மட்டுமே மின்சாரம் இருப்பதாகவும், மற்ற நேரங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகவும் மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டி வந்தனர். நாகூர் மீரான் நகர் பகுதியில் ஏற்படும் தொடர் மின்வெட்டால் வீட்டில் இருக்கும் கை குழந்தைகள் உறக்கம் இல்லாமலும், குளிர்சாதனை பெட்டியில் வைத்து இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்தும் கெட்டுப் போவதாகவும், தொடர் மின்வெட்டால் கடுமையாக அவதிப்படுவதாகவும் கூறினர்.
அதேபோல், மின்வெட்டு ஏற்படும் நேரத்தில் கோவளத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டால், மின்வாரிய ஊழியர்கள் செல்போன் அழைப்பை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சூழலில், நேற்று மாலை 4 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இரவு ஆகியும் மின்சாரம் வராததால் ஆத்திரம் அடைந்த கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்கள் ஏராளமானோர், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கானத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுனர். போலீசார் மின்சாரம் வருவதற்கு வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து, கானத்தூர் நாகூர் மீரான் நகர் பகுதி மக்களுக்கு தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டை சரிசெய்ய வேண்டும் எனவும், தங்களுக்கு மின்வெட்டு இல்லாமல் சீரான மின் விநியோகம் நிரந்தரமாக வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தொடர் மின்வெட்டால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதன் காரணமாக, சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதேபோல், தாம்பரத்தை அடுத்த செம்பாக்கம், சாம்ராஜ் நகர், கரகேஸ்வரி நகர், வி.ஜி.பி பொன் நகர், மணவாளன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு தொடர்ந்து 4 மணிநேரத்திற்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும், எந்த விதமான உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக அப்பகுதியில் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம், வேளச்சேரி சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மின் வெட்டு குறித்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பேசுகையில்,
”இந்த பகுதியின் எம்.எல்.ஏவை வரச் சொல்லுங்கள். நாங்கள் 5 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் தவித்து வருகிறோம். மின்வாரிய அலுவலத்தை தொடர்பு கொண்டால் முறையாக பதில் இல்லை.
கடந்த 15 நாட்களாகத் தொடரும் மின்வெட்டுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். சம்பவ இடத்திற்கு மின்வாரிய அதிகாரிகளும், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நேரில் வந்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
சாலை மறியல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர்.

0 கருத்துகள்: