சட்டப் பேரவை 2 ஆம் நாள் கூட்டத் தொடர்: மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் !!!
த.வெ.க அரசு பொறுப்பேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜூன் 18) ஆளுநர் உரையுடன் தொடங்கியது. முதலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்க, அவரைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் உரையை தமிழில் வாசித்தார். அத்துடன் நேற்றைய கூட்டத்தொடர் நிறைவு அடைந்தது.
இரண்டாவது நாள் கூட்டத்தொடரான இன்று சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களின் மறைவு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட, அடுத்து மறைந்த பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து அரசினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், இன்றைய கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வாக முதலமைச்சர் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித் தீர்மானத்தை முன்மொழிகிறார்.
ஒருமனதான நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த சிறப்பு தனி தீர்மானம், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஒற்றுமையாக நின்று அணை கட்டுவதை தடுப்போம் - உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில்,
“மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தான் தி.மு.க வின் உறுதியான நிலைபாடு. தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சி, கர்நாடகாவில் ஆட்சி புரிந்தாலும் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அணை கட்டுவதை கடுமையாக எதிர்த்தார். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் மூலம் காவிரி நீரை பெற்று வருகிறோம். முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க சார்பில் மனதார வரவேற்கிறோம்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்ற கருத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன் வைத்தார். இது தொடர்பாக ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சருக்கு கடிதத்தையும் அனுப்பினார். தி.மு.க அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாகத் தான் மேகதாதுவின் திட்ட அறிக்கை மத்திய நீர்வள ஆணையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. தி.மு.க அரசும் எங்கள் தலைவரும் தைரியமாக எதிர்ப்பை பதிவு செய்ததால் தான் இது சாத்தியமானது.
கர்நாடகாவில் அணை கட்ட சட்ட ரீதியாக எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க ஆதரவு தருகிறது. ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம். முதலமைச்சரின் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம். அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து, ஒற்றுமையாக நின்று நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும். இதற்கு தி.மு.க தயாராக உள்ளது. ஒருமனதாக மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்.
மேட்டூர் அணை திறக்காததால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு நியாயத்தை எடுத்து வைத்து நமக்குரிய நீரை பெற்றுதர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது ஆதரவை வழங்கினார்.
போராடி போராடியே காவிரி நீரை பெற்று வருகிறோம் - ஈ.பி.எஸ் உரை
மேகதாது அணை திட்ட தனித் தீர்மானம் மீதான விவாத்ததில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி,
“மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த அ.தி.மு.க பலமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. 24.4.2015 இல், மேகதாது திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என கர்நாடக அரசை வலியுறுத்தக் கோரி மத்திய அரசிடம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் வழங்கினார். பிறகு அதே ஆண்டில் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்தக் கூடாது என மீண்டும் வலியுறுத்தினார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரமும் உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும். அணை கட்டினால் நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் கர்நாடகா மாநிலம் நீரை முழுவதுமாக பயன்படுத்திவிடும். எனவே நாம் முதலமைச்சராக இருந்த போதும் மேகதாது அணையை கட்டக் கூடாது என பிரதமரை வலியுறுத்தினேன். நாம் எப்போதும் போராடி போராடியே காவிரி நீரை பெற்று வருகிறோம். காவிரி ஆற்றின் மீது நமக்குரிய உரிமையை பேணி காப்பது நம் அனைவரது உரிமையாகும். அ.தி.மு.க சார்பில் முதலமைச்சர் கொண்டு வந்த அரசின் தனி தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்கிறோம்” என்று ஆதரவு தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய்யின் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு
மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு தீர்மானத்திற்கு, காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், கர்நாடகா அரசின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது எனவும், மேகதாது அணைக்கு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட, விவசாயிகள் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு எடுத்துவரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான சிறப்பு தீர்மானம் - முன்மொழிந்தார் முதல்வர்
கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக அரசின் சிறப்புத் தீர்மானத்தை பேரவையில் முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார். அவர் பேசுகையில்,
மேகதாது அணை திட்டத்திற்கு எதிரான தனி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் முன்மொழிவதாக கூறி, “மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தொழில் உள்ளிட்ட எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசுக்கு இந்த பேரவை கேட்டுக்கொள்கிறது.
கர்நாடகா அரசு நீதிமன்ற உத்தரவை மீறி அணை கட்ட முயற்சிக்கிறது. கர்நாடகா அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு பரிசீலிக்கக் கூடாது. அதற்கான திட்ட அனுமதியையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்” என்று தீர்மானத்தை முன்மொழிந்தார்.
முன்னாள் எம்.எல்.ஏக்கள், பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல்
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர்களான சி. ராமசுவாமி, தா. வீராசாமி, சி. சுவாமிநாதன், அ.க ஆறுமுகம், பெ. கண்ணன் மற்றும் அ. நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் வாசிக்க, அவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் செயலாளர் சி.கே.ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி மற்றும் கே.ராஜன், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு சபாநாயகர் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாற்றுத் தலைவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை ஒத்திவைத்து, அரசின் சிறப்புத் தீர்மானத்தை இன்று எடுத்துக்கொள்ள வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் முன்மொழிந்தார்.

0 கருத்துகள்: