தமிழ்நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் உட்பட 5 பேர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் !!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா உள்பட 5 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார். இவர்களில் மோகனா என்பவர் வழக்கறிஞராக இருந்து நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், மத்திய பிரதேசம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவி சச்தேவா, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அருண் பல்லி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த மூத்த பெண் வழக்கறிஞர் வி.மோகனா ஆகியோரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் உச்சநீதிமன்றத்தில் ஒரே ஒரு பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது இந்த நியமனத்தின் மூலம் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்து உள்ளது.
தமிழ்நாட்டின் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நிறைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.மோகனா. கடந்த 1983- ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முறையாக ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.ஏ. எல்.எல்.பி பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த படிப்பை தேர்வு செய்த வி.மோகனா, கோயம்புத்தூர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து வெற்றிகரமாக பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து பார் கவுன்சிலில் சேர்ந்தார்.
பஞ்சபாகேசன் என்பவரின் அலுவலகத்தில் இளநிலை வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். பின்னர் டெல்லி சென்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்கோத்ரா, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆகியோருடன் பணி புரிந்து சட்ட நுணுக்கங்களை வளர்த்துக் கொண்டார். அதன் பிறகு உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், தேசிய நுகர்வோர் ஆணையம் ஆகியவற்றில் வழக்கறிஞராகப் பணி புரிந்து உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர்களும், மூத்த வழக்கறிஞர்களுமான கபில்சிபல், ப.சிதம்பரம், அருண்ஜெட்லி, மூத்த வழக்கறிஞரும், மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான கே.கே.வேணுகோபால், மூத்த வழக்கறிஞர் அந்தியாருஜினா ஆகியோருடன் வி.மோகனா பணியாற்றி உள்ளார்.
2031ஆம் ஆண்டு ஜூன் வரை உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக வி.மோகனா பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ள வி. மோகனாவிற்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், “உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டு உள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்று உள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்.
மாண்பமை உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்க இருக்கும் அவர்களுக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: