திங்கள், 1 ஜூன், 2026

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு அமல் !!!

SHARE

 தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு அமல் !!!

தலைமைச் செயலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் அலுவலகங்கள் உள்ளன. மேலும், நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில் 54 துறை செயலர்கள், பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு காலை 9.30 மணி அளவில் வருகை தருகிறார். மேலும், மாலை 5 மணி வரை இருந்து அலுவலகப் பணிகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்.

இதன் காரணமாகத் தலைமைச் செயலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு முன்பாகவே அலுவலகத்திற்கு வர வேண்டும் என அந்தந்த துறை சார்பாக வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

தலைமைச் செயலகத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்குக் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அலுவலக பணி நேரமாக உள்ளது. இதன் இடையே தினமும் அரை மணி நேரம் உணவு இடைவேளை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், வாய்மொழி உத்தரவை அடுத்து இன்று (ஜூன் 1) முதல் தலைமைச் செயலகத்தில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக மனிதவள மேலாண்மைத் துறையில் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் மற்றும் முகம் கண்டு அறியும் தொடுதிரை இயந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.

இன்று முதல் மனிதவள மேலாண்மைத் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தங்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காலை வழக்கம் போல் அலுவலகம் வருகை தந்த அரசு ஊழியர்கள் தங்களின் வருகையை புதிய நடைமுறையின்படி பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, மற்ற துறைகளுக்கும் விரைவில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு திட்டத்தை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்ட போது தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: