55 உசிர் இருக்கு... எங்காவது சாத்துனா என்னாகிறது ?” நடுரோட்டில் குடித்து விட்டு தள்ளாடிய அரசு பேருந்து ஓட்டுநர் : விபத்து பயத்தில் அலறிய பயணிகள் - பகீர் வீடியோ வைரல் !!!
மதுரையில் இருந்து கோவை வந்த பேருந்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடந்த விபரீதம் – குடோனில் படுத்து உறங்கிய டிரைவர் !!!
“வண்டியில் குழந்தைகளும் பெண்களும் இருக்கிறாங்க... 55 உசிர் இருக்கு, எங்காவது போய் சாத்துனா என்னாகிறது? யார் பதில் சொல்லுவது? அவருக்கு கெட்ட நேரமில்லை, நமக்குத் தான் கெட்ட நேரம்!” என நள்ளிரவில் அரசு பேருந்து ஓட்டுநரை பயணிகள் வளைத்துப் பிடித்துக் கேள்வி எழுப்பும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர வைத்து உள்ளது.
மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு கோவை நோக்கி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து (TN 57 N 2980) ஒன்று புறப்பட்டு உள்ளது. பேருந்தில் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 55-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து உள்ளனர். பேருந்து புறப்பட்ட சில கிலோ மீட்டரிலேயே ஓட்டுநர் வண்டியை அங்கும் இங்குமாகத் தாறுமாறாக, அதிவேகமாக இயக்கத் தொடங்கி உள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய பேருந்துக்குள் இருந்த பயணிகள், விபத்து ஏதும் ஏற்பட்டுவிடுமோ ? என்ற மரண பயத்தில் அலறி உள்ளனர்.
பேருந்து திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வந்த போது, பயத்தின் உச்சத்துக்கே சென்ற பயணிகள், மேற்கொண்டு இந்த ஓட்டுநரை நம்பிப் பயணிக்க முடியாது என முடிவெடுத்து, ஓட்டுநரிடம் வண்டியைச் சாலை ஓரமாக நிறுத்துமாறு சத்தம் போட்டு உள்ளனர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தி உள்ளார். ஆனால், வண்டியை நிறுத்திய அடுத்த கணமே, ஓட்டுநர் பேருந்தில் இருந்து தள்ளாடியபடி இறங்கி, அருகில் இருந்த ஒரு குடோனுக்குள் சென்று அப்படியே தரையில் படுத்து உறங்கி உள்ளார்.
இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த பயணிகள், குடோனுக்குள் சென்று போதையில் கிடந்த ஓட்டுநரை எழுப்பி, “நிக்கவே முடியவில்லை... எப்படி இவ்வளவு தூரம் வண்டியை ஓட்டி வந்தீர்கள் ? மணி நைட் ரெண்டு மணி ஆச்சு, குடித்து விட்டு வந்து இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள் ? என்ன பதில் சொல்லப் போறீங்க ?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி ஆவேசமாகத் தட்டிகேட்டு உள்ளனர்.
பயணிகள் ஓட்டுநரைச் சூழ்ந்து கொண்டு நியாயம் கேட்கும் இந்த ஒட்டுமொத்தக் காட்சிகளையும் தங்களது செல்போன்களில் வீடியோ’ ஆகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் தட்டி விட்டு உள்ளனர்.
இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
55 பயணிகளின் உயிரை அடகு வைத்து நள்ளிரவில் மதுபோதையில் பேருந்தை இயக்கிய அந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: