செவ்வாய், 30 ஜூன், 2026

அம்மோனியா வாயு கசிவு விபத்து: சிகிச்சை முடிந்து சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்ட அசாம் தொழிலாளர்கள் !!!

SHARE

 அம்மோனியா வாயு கசிவு விபத்து: சிகிச்சை முடிந்து சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்ட அசாம் தொழிலாளர்கள் !!!

அம்மோனியா வாயு கசிவு விபத்தில் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அசாமை சேர்ந்த 68 பேர், சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கண்ணிகை பேர் கிராமத்தில், 'செயின்ட் பீட்டர் அண்டு பால் சீ ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இறால் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வட மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த 21-ம் தேதி திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அப்போது அந்த தொழிற்சாலையில் பணி புரிந்த 240 தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், இதுவரை 16 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரும், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மீதமுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை முடிந்தவர்கள் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த 26 ஆம் தேதி, முகாமில் தங்கி தங்க வைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 62 பேர், ஓடிசா தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதே போல், அசாம் மாநில சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் 2 பேருந்துகளில் 68 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெரியபாளையத்தில் இருந்து 2 பேருந்துகளில் புறப்பட்ட தொழிலாளர்கள், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் முன்னிலையில் அசாம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து சென்னை எழும்பூருக்கு சென்ற தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அசாம் புறப்பட்டனர். தொழிலாளர்கள், இன்று மாலை அசாம் மாநிலத்தை சென்றடைகின்றனர். இதனிடையே, மீதமுள்ள 49 பேர் இன்னும் சில நாட்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அசாம் மாநில சுகாதாரத்துறை அதிகாரி சுராஜித் பருவா, “அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியது. மேலும் தேவையான மருத்துவ உதவிகள் அளித்து, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்ததற்கு நன்றி” என தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: