நகை ஷோரூமில் திடுக்கிடும் திருட்டு : கணக்கெடுப்பின் போது சிக்கிய மர்மம்! 60 கிராம் தங்கக் காசுகள் மாயம் !!!
கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல 'தங்க நகை ஷோரூமில், ஊழியர்களின் கண்ணைத் தப்பி 6 தங்கக் காசுகள் திருடு போன சம்பவம் நகை வியாபாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, குனியமுத்தூர் வசந்தம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வி.அப்துல்லா (வயது 34). இவர் காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில், காந்திபுரம் ரவுண்டானா அருகே உள்ள பிரபல தங்க நகை ஷோரூமில் பொது மேலாளராகப் பணி புரிந்து வருகிறார்.
கடந்த 9-ந் தேதி இரவு கடையை மூடுவதற்கு முன்பாக வழக்கமான நகை இருப்பு சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அப்போது, விற்பனைப் பிரிவில் வைக்கப்பட்டு இருந்த தலா 10 கிராம் எடையுள்ள 6 தங்கக் காசுகள் பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள
60 கிராம், மாயமாகி இருப்பதைக் கண்டு மேலாளர் அப்துல்லா மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடையின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் நகைகள் கிடைக்கவில்லை.
யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றதை உணர்ந்த மேலாளர், நேற்று கடையின் உள்ளே மற்றும் வெளியே பொருத்தப்பட்டு இருந்த உயர்ரக சி.சி.டி.வி கேமரா காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தார். அப்போது கடந்த ஜூன் 9-ந் தேதி மாலை வாடிக்கையாளர்கள் போல கடைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், ஊழியர்கள் மற்ற வாடிக்கையாளர்களுக்கு நகை காண்பித்துக் கொண்டு இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் 6 தங்கக் காசுகளையும் திருடிக் கொண்டு நைசாக நழுவிச் செல்வது பதிவாகி இருந்தது.
இதை அடுத்து மேலாளர் அப்துல்லா காட்டூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகி உள்ள மர்ம நபர்களின் உருவப் படத்தை வைத்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்: