உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த சிறுவன் அடித்துக் கொலை ; தாய் கள்ளக்காதலனுக்கு தண்டனை உறுதி - கோவை நீதிமன்றத்தில் 22 ம் தேதி தீர்ப்பு !!!
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த சிறுவனை அடித்துக் கொன்ற தாய், கள்ளக் காதலனுக்கு தண்டனை உறுதி செய்த நீதிமன்றம் 22 ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது.கோவை, சாய்பாபா காலனி, கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவருக்கு அபிஷேக் என்ற ஆறு வயது மகனும், மூன்று வயது மகளும் இருந்தனர். திவ்யா ஒரு அட்டைப்பெட்டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். திவ்யா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜதுரை என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக் காதலாக மாறியது. ராஜதுரை அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்கு வந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்தார். அதற்கு குழந்தைகள் இடையூறாக இருந்ததாக அவர்கள் கருதினர். எனவே இரண்டு குழந்தைகளையும் அடித்து துன்புறுத்தினர்
இதில் சிறுவன் அபிஷேக்கை மிகவும் கொடுமைப்படுத்தி உள்ளார். பள்ளிக்கு வந்து தனது தந்தை பார்த்த போது தாயும், வீட்டுக்கு வரும் நபரும் அடிக்கடி கொடுமைப்படுத்துவதால் தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறி சிறுவன் கதறி அழுது உள்ளான். அப்பொழுது சிறுவனின் தந்தை புதிதாக கட்டும் வீட்டு பணிகள் முடிந்ததும் மகனையும், மகளையும் அழைத்துச் செல்வதாக ஆறுதல் கூறி உள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு அன்று சிறுவனை அங்கு உள்ள ஒரு கடை அருகே வைத்து ராஜதுரையும், திவ்யாவும் குச்சியால் அடித்துக் கொடுமைப்படுத்தி உள்ளனர். அதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டித்து உள்ளனர். இந்நிலையில் மயங்கி விழுந்த சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து திவ்யா, கள்ளக்காதலன் ராஜதுரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைகள் விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட திவ்யாவுக்கும், ராஜதுரைக்கும் தண்டனை வழங்குவதை நீதிபதி உறுதி செய்தார். அந்த தண்டனை விவரம் வருகிற 22ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.

0 கருத்துகள்: