விழுப்புரம் அருகே 7000 ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதங்கள் கண்டெடுப்பு !!!
தென்பெண்ணை ஆற்றில் சுமார் 7,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
விழுப்புரம் அருகே உள்ள தளவானூர் மற்றும் எனதிரிமங்கலம் பகுதிகளில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் சுமார் 7,000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வின் போது மொத்தம் மூன்று கற்கால கைக்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று முழுமையான நிலையில் இருந்ததுடன், மற்ற இரண்டு உடைந்த நிலையில் இருந்தன.
முதல் கருவி 10 செ.மீ உயரமும் 5.9 செ.மீ அகலமும், இரண்டாவது கருவி 9.5 செ.மீ உயரமும் 4.5 செ.மீ அகலமும், மூன்றாவது கருவி 8.5 செ.மீ உயரமும் 4.2 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது.
கருங்கல்லால் செய்யப்பட்ட கைக்கோடாரிகள்
கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த கைக்கோடாரிகள், ஒருபுறம் கூர்மையாகவும் மறுபுறம் தட்டையாகவும் இருப்பதுடன், அவை நன்கு தேய்த்து மெருகேற்றப்பட்டு உள்ளன.
தென்பெண்ணை ஆற்றில் இடிந்த தடுப்பணையை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு, ஜே.சி.பி (JCB) இயந்திரம் மூலம் தடுப்பணைக்காக பள்ளம் எடுக்கப்பட்ட பகுதிகளிலேயே இந்த கற்கால ஆயுதங்கள் கிடைத்து உள்ளன. இது புதிய கற்காலம் கி.மு. 3000 முதல் கி.மு. 1000 வரையிலான காலப் பகுதியைச் சேர்ந்ததாக இருக்கும் என தற்போது கணிக்கப்பட்டு உள்ளது.
இக்காலத்தில் மனிதன் நிலையான குடியிருப்பை அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டதுடன், மெருகேற்றப்பட்ட கற்கருவிகள் மற்றும் மண்பாண்டங்களை பயன்படுத்தி இருந்தான். இதற்கு சான்றாகவும், தென்பெண்ணை ஆற்றங்கரையில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு சான்றாகவும் தற்போது கண்டெடுக்கப்பட்டு உள்ள கற்கால கருவிகள் அமைந்து உள்ளன.
மேலும், இந்த ஆயுதங்கள் வாயிலாக விவசாயம் மற்றும் வேட்டைகளில் பண்டைய கால தமிழர்கள் திறம்பட செயல்பட்டு உள்ளனர் என்பதும் தெரிய வந்து உள்ளது.

0 கருத்துகள்: