திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 8 பேர் கைது !!!
கிரிவலப் பாதையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்து, அவர் அணிந்து கருந்த நகையை பறித்துச் சென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர்.
திருவண்ணாமலையில் உள்ள வேல்நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மாதம் 31-ஆம் தேதி மாலை தனது சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அருணாசலேஸ்வரர் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், கிரிவலம் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கிரிவலப் பாதையில் உள்ள அடி அண்ணாமலை கிராமம் அருகே சென்ற போது, அவர் தனது காதலனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் காதலன் இரு சக்கர வாகனத்தில் வந்து அவரை சந்தித்து உள்ளார். இருவரும் அடி அண்ணாமலை ஏரிக்கரை பகுதிக்கு சென்று உள்ளனர்.
அந்த சமயத்தில் அங்கு இருந்த சிலர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவரின் காதலனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இளம்பெண் காதில் அணிந்து இருந்த சுமார் 2 கிராம் தங்க நகையை அவர்கள் பறித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆடையூர் பகுதியைச் சேர்ந்த வாசு என்ற வாசுதேவனை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 7 பேரை காவல் துறையினர் பிடித்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதுடன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையும், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பி உள்ளது. மேலும் கிரிவலப் பாதையில் காவல் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

0 கருத்துகள்: