நெல்லையில் 13 வயது சிறுமியிடம் அத்துமீற முயன்ற நபர் போக்சோவில் கைது !!!
திருநெல்வேலியில் 13 வயது சிறுமியிடம் அத்துமீற முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே போக்சோ வழக்கில் கடந்த ஆண்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் கைதாகி உள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நயினார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (34) அப்பகுதியில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று மாலை நயினார்குளம் பகுதியில் உள்ள கடைக்கு தனியாகச் சென்று கொண்டு இருந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை மதுபோதையில் வழிமறித்து கையைப் பிடித்து வலுக் கட்டாயமாக பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரிடம் இருந்து போராடி தப்பித்து வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் பெற்றோர், நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சிறுமியிடம் அத்துமீற முயன்றதாக முத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர் ஏற்கெனவே 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்து உள்ளது. அப்போதும் இதுபோன்று வேறொரு சிறுமியிடம் அத்து மீறியது தெரியவந்து உள்ளது. இந்த நிலையில், தற்போது மீண்டும் போக்சோ வழக்கில் முத்து கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: