கோவை சூலூர் சிறுமி பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு; 819 பக்க குற்ற பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் - 18 நாட்களில் போலீசார் நடவடிக்கை !!!
தமிழகத்தையே உலுக்கிய 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில், கோவை நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 21-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்தி (33) அவரது நண்பர் மோகன் (30) ஆகியோரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட போது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதை ஒட்டி கார்த்தியை, கோவை மத்திய சிறையில் சக கைதிகள் தாக்கினர். இதை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த 3-ம் தேதி போலீஸார் இருவரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடங்களுக்கு 2 பேரையும் அழைத்துச் சென்று அவர்களின் வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தனர். தொடர்ந்து 2 பேரும் வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதை அடுத்து மோகன் கோவை மத்திய சிறையிலும், கார்த்தி கோவை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணி ஏற்கெனவே சூலூர் போலீஸார் தொடங்கிய நிலையில், 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் இ-பைலிங் முறையில் தாக்கல் செய்து, நீதிமன்றத்திலும் நேற்று முறைப்படி ஒப்படைத்தனர்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த 819 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சம்பவம் நடந்த 21 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருப்பதால், வழக்கு விசாரணை முடுக்கி விடப்பட்டு, விரைவில் இந்த வழக்கில் நீதிமன்றத்தால் தீர்ப்பு தரப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்: