A+ ரவுடி ஒற்றைக் கண் ஜெயபாலை சுற்றி வளைத்த தனிப்படை போலீஸ்: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க திட்டம் ? !!!
அரக்கோணத்தை சேர்ந்த பிரபல A ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான ஒற்றைக் கண் ஜெயபாலை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க இவர் திட்டமிட்டு வந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி. நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயபால் என்ற ஒற்றைக்கண் ஜெயபால் (66). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 13 குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கின்ற ஆற்காடு சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கில், ஜெயபால் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர்.
அதுமட்டுமின்றி, இவர் சென்னை பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு நாள், அடுத்த மாதம் 5 ஆம் தேதி (ஜூலை 5) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்னதாகவே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை சார்பில் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
குறிப்பாக, ஒற்றைக் கண் ஜெயபால் மற்றும் அவரது ஆட்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடக் கூடும் என உளவுத்துறை கூறியதாக தெரிகிறது.
இதை அடுத்து, ரவுடிகள் ஒழிப்பு தனிப்படை போலீசார் சென்னை, வேலூர், அரக்கோணம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும், ஒற்றைக் கண் ஜெயபாலையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் அவர் சில நபர்களுடன் தொடர்ந்து பேசி வருவது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சில ரவுடிகளுடன் ஜெயபால் பேசி வருவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், நேற்று அரக்கோணத்துக்கு வந்த தனிப்படை போலீசார், ரவுடி ஜெயபாலை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர், ஜெயபாலை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்த பேசின்பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழி தீர்க்க ஜெயபால் திட்டமிட்டு வந்தாரா ? ரவுடிகளுடன் தொடர்ந்து பேசி வர என்ன காரணம் ? ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: