திங்கள், 22 ஜூன், 2026

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் !!!

SHARE

 தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் !!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுவதாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ. ஜான் பாண்டியன் கூறி உள்ளார்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான பெ. ஜான் பாண்டியன் கலந்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்

"தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இன்று முதல் வெளியேறுகிறது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நட்பு தொடரும். ஆனால், அந்த கூட்டணியில் நாங்கள் இல்லை.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேவைகளும், சேவைகளும் அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறுகிறது. தேர்தல் காலத்தில் யாரோடு பயணிக்க வேண்டும் ? யாரோடு இணைய வேண்டும் ? என்பதை பொதுக்குழு கூட்டி முடிவு எடுப்போம். நாங்கள் என்.டி.ஏ-வில் இருந்து வெளியேறியதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது.

ஆகாஷ் டெலிசன், மரண வழக்கில் தவறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் சி.பி.சி.ஐ.டி இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவரின் உடலை காவலர்களே அடக்கம் செய்து உள்ளார்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆகாஷ் டெலிசன் என்பதால் காவல்துறை இதுபோன்று செயல்படுகிறதா ? என அச்சம் எழுந்து உள்ளது.

ஆகாஷ் டெலிசன் விவகாரத்தில் போராடியவர்களை காவல்துறை கைது செய்து உள்ளது. ஆனால், அரசு மௌனமாக இருக்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ச்சியாக இணைந்து வருகிறார்கள். ஆனால், எங்களது கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளோ, பொறுப்பாளர்களோ யாரும் இணையவில்லை. ஒரு சொம்பு பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தாலும் விஷம் தான். விஷத்தை உங்களோடு சேர்த்து, நீங்களும் அழிந்து போக வேண்டாம்.

முதலமைச்சர் விஜய் மௌன விரதம் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர் மௌன விரதத்தை கலைக்கும் போது தான் தமிழக மக்கள் அவரை புரிந்து கொள்வார்கள். அரசியல் மாற்றம் வேண்டும் என மக்கள் அவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். மக்களுக்கு அவர் கொடுக்கும் பரிசு மௌனம் தான்.

அ.தி.மு.க எல்.ஏ-க்கள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றது, பேரம் பேசியதனாலேயே நடந்து உள்ளது. துரோகம் செய்தவர்களை இனியும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ராஜினாமா செய்தவர்களை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது" என தெரிவித்தார்.

முன்னதாக பேசிய அவர், "ஆட்சி அமைத்து உள்ள த.வெ.க-வுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மனப் பூர்வமான வாழ்த்துகள். தமிழகத்தில் ஆணவப் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கஞ்சா புழக்கம் போன்றவைகள் இந்த அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த காவல்துறை தவறி விட்டது" என்று ஜான் பாண்டியன் குற்றம்சாட்டினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: