கோவை தனியார் பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது !!!
*கோடை விடுமுறையில் அரங்கேறிய விபரீதம்: பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு !!!*
கோவையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய திண்டுக்கல்லைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரை கோவை கிழக்கு மகளிர் போலீசார் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு (34) என்ற நபர், கோவையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்து உள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாத கோடை விடுமுறை காலத்தின் போது, தனது வகுப்பில் படித்து வந்த மற்றும் தன்னுடன் நெருக்கமாக பழகி வந்த சில மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு இவர் தொடர்ச்சியாக ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்செயலாக மாணவர்களின் செல்போன்களைச் சோதித்த பெற்றோர்கள், அதில் ஆசிரியர் பாபு அனுப்பி இருந்த ஆபாசப் பதிவுகளைப் பார்த்து அதிர்ச்சியிலும் வேதனையிலும் உறைந்து போயினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திரண்டு சென்று, சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி வளாகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து, உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களிடம் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டனர். தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் பாபுவின் செல்போனை வாங்கி போலீசார் தீவிர தொழில்நுட்பப் பகுப்பாய்வு செய்த போது, அவர் மாணவர்களுக்கு ஆபாசப் படங்களை அனுப்பியது உறுதியானது
இதை அடுத்து, கோவை கிழக்கு மகளிர் காவல் நிலைய போலீசார் மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக ஆசிரியர் பாபு மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: