கோவையில் நள்ளிரவு பயங்கரம் : சொகுசு காரில் வந்து முகமூடி ஆசாமிகள் அட்டகாசம் - வீட்டின் முன் நின்ற கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்படும் சி.சி.டி.வி காட்சிகள் !!!
தொழில் போட்டியா? கொள்ளை முயற்சியியா? சரவணம்பட்டி போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் !!!
கோவை, சரவணம்பட்டி பகுதியில் நள்ளிரவில் சொகுசு காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாடகை காரின் கண்ணாடிகளை கற்களால் அடித்து நொறுக்கி விட்டு தப்பியோடிய துணிகர சம்பவம் உள்ளூர் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, சரவணம்பட்டி புரோ ஜோன் மால் (Prozone Mall) பின்புறம் வசித்து வருபவர் பாஸ்கர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவையில் வாடகை கார் (Travels Car) ஓட்டி ஏழ்மையான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
ஆதரவுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில், இந்த வாடகை காரை நம்பியே அவரது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இயங்கி வருகிறது.
வழக்கம் போல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது சவாரி பணிகளை முடித்து விட்டு வந்த பாஸ்கர், புதன்கிழமை (ஜூன் 10) நள்ளிரவு சுமார் 1:00 மணி அளவில் தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அந்தத் தெருவுக்குள் வோல்க்ஸ்வாகன் (Volkswagen) என்ற பல லட்சம் மதிப்பு உள்ள உயர் ரக சொகுசு கார் ஒன்று மிக நிதானமாக நுழைந்து உள்ளது.
அதில் இருந்து முகமூடி அணிந்தபடி இறங்கிய இரண்டு மர்ம நபர்கள், திடீரென பெரிய கற்களைக் கொண்டு பாஸ்கரின் கார் கண்ணாடிகளை ஓங்கி அடித்து நொறுக்கினர்.
கார் கண்ணாடிகள் சுக்குநூறாக உடையும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் விழிப்பதற்குள், அந்த முகமூடி ஆசாமிகள் தங்களது காரில் ஏறி அதிவேகமாகத் தப்பியோடினர்.
சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த பாஸ்கர், தனது வாழ்வாதாரமாக விளங்கிய காரின் முன் மற்றும் பின் பக்க கண்ணாடிகள் முற்றிலும் உடைந்து நொறுங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
இதுகுறித்து பாஸ்கர் உடனடியாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் முறையான புகார் அளித்தார்.
பின்னர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை (CCTV Footages) பார்த்த போது அதில், சொகுசு காரில் முகமூடி அணிந்து வரும் நபர்கள் மிகத் துணிச்சலாக காரின் கண்ணாடிகளை உடைக்கும் காட்சிகள் அப்படியே பதிவாகி இருந்தது.
இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது ஏதேனும் தொழில் போட்டி காரணமாக அரங்கேறிய திட்டமிட்ட சதியா அல்லது காரில் உள்ள பொருட்களைத் திருடுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதலா ? என்ற கோணத்தில் சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: