கடினமான நேரத்திலும் அ.தி.மு.க விற்கு ஆதரவாக தான் உள்ளேன் - டி.டி.வி. தினகரன் !!!
இந்த கடினமான நேரத்திலும் நான் அ.தி.மு.க விற்கு ஆதரவாக தான் உள்ளேன் என்று அ.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், "சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு சில அ.ம.மு.க மாவட்ட நிர்வாகிகள் வேறு கட்சியில் இணைந்து உள்ளனர். அவ்வாறு இணைந்தவர்கள் அ.ம.மு.க வை கூண்டோடு கலைத்து விட்டோம் என்று கூறுகிறார்கள். அவை அனைத்தும் பொய். அமமுகவை யாராலும் கூண்டோடு கலைக்க முடியாது. வேற கட்சியில் இணைந்தவர்கள் சுயநலத்திற்காக இணைந்து உள்ளனர்.
தேர்தலில் தோல்வி அடைந்த பின் கட்சியை மீண்டும் வலுப்பெற செய்வதற்கு கட்சித் தலைமை பல்வேறு மாற்றங்களை செய்யும். இதுதான் கடந்த கால நடைமுறை. ஆனால் தற்போது கட்சித் தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், சில நிர்வாகிகள் சொந்த காரணங்களுக்காக வேறு கட்சிகளுக்கு தாவுகின்றனர். அவ்வாறு வேறு கட்சிக்கு செல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க வை வழி நடத்தும் தருணம் இது தான் என சமூக ஊடகங்களில் பரவும் கருத்துக்களை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். இப்போதும் நான் அ.தி.மு.க வில் தான் உள்ளேன். ஆனால் அவர்களுடன் கூட்டணியில் உள்ளேன். மற்ற கட்சிகளைப் போன்று ஒரு கூட்டணியில் இருந்து வெற்றி பெற்று விட்டு பின்னர் அதற்கு நேர் எதிரான கூட்டணியில் இணைந்து அமைச்சர் பதவியை பெறுபவன் நான் அல்ல. கூட்டணிகள் மற்றும் மற்ற கட்சிகளை சார்ந்த நிர்வாகிகளின் உழைப்பில் தான் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதனால் அந்தக் கூட்டணியிலேயே தொடர்வது தான் கூட்டணி தர்மம்.
இந்த கடினமான நேரத்திலும் நான் அ.தி.மு.க விற்கு ஆதரவாக தான் உள்ளேன். அ.தி.மு.க வும், அ.ம.மு.க வும் ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால் நாங்கள் அதை நினைக்கவில்லை. நாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் எங்கள் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று த.வெ.க வினர் பேசுவது தவறு. விவசாயிகளுக்கு முழுவதுமாக பயிர்க்கடன் ரத்து என்று சொல்லி விட்டு அதில் வரைமுறை வைப்பது ஏமாற்று வேலை.
இதே போல் 200 யூனிட் இலவசம் மின்சாரத்திலும் பிரச்சனைகள் உள்ளது. முந்தைய தமிழ்நாடு அரசு 10 லட்சம் கோடி கடன் இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்து விட்டனர். கடந்த 2021 தேர்தலில் தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்கி தி.மு.க அரசு சிக்கலை சந்தித்தது. அதே போன்று த.வெ.க வும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக வருகிறோம் என்று சொல்லி விட்டு, திராவிட கட்சிகள் செய்ததையே தான் அவர்களும் செய்கின்றனர். இது புதிய ஆட்சியாக தெரியவில்லை. தி.மு.க ஆட்சியின் நீட்சியாக தான் தெரிகிறது.
தமிழ்நாட்டில் குதிரை பேரம், கழுதை பேரம், இவை எல்லாம் தாண்டி காக்கா பேரம் என்று புதிதாக உருவாகி உள்ளது. அதற்கும் த.வெ.க கட்சி தான் காரணம். தமிழ்நாடு முழுவதிலும் மின்வெட்டு பிரச்சனை இருக்கிறது. இதனை சரி செய்யாமல் கடந்த ஆட்சியைக் குறைச் சொல்வது தவறு" என கூறினார்.

0 கருத்துகள்: