வியாழன், 11 ஜூன், 2026

தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை - வீரபாண்டியன் அறிவிப்பு !!!

SHARE

 தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இல்லை - வீரபாண்டியன் அறிவிப்பு !!!

திமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ் கட்சி வெளியேறி விட்டதாக அந்த கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிவித்து உள்ளார்.

நடந்து முடிந்த 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் தி.மு.க தலைமை வகித்த இந்தியா கூட்டணியில் தமிழ்நாட்டில் உள்ள 21 கட்சிகள் அங்கம் வகித்தன. தேர்தலுக்கு முன்பே தொகுதி பங்கீடு குறித்து சில கட்சிகள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தன. இந்நிலையில், மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. இதில் 108 இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவானது.

தொடர்ந்து த.வெ.க ஆட்சி அமைக்க வெளிப்படையாகவே தி.மு.க வுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ் சென்றது.

அதே போல், த.வெ.க ஆட்சியமைக்க வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க மற்றும் ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தெரிவித்து இருந்தன. ஆனால், அந்த கட்சிகள் தி.மு.க கூட்டணியிலேயே நீடிப்பதாக தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அறிவித்து உள்ளார். 

கோவையில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தெரிவித்தார்.

கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், 

“தற்போதைய சூழலில் தி.மு.க கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து இருக்கிறோம்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எங்களுக்கு நட்பு சக்தி தான். அதே சமயம், தற்போது ஆட்சியில் உள்ள கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. வெளியே இருந்து தான் ஆதரவு அளிக்கிறோம். தற்போது அங்கும் கூட்டணி அமைக்கும் சூழல் இல்லை. முறைப்படி நிர்வாகக் குழு கூடி அறிவிப்பு வெளியிடப்படும்.

இனி வரும் சூழல் பொறுத்து அணி சேர்க்கை குறித்து உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் முடிவு செய்வோம். ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிப்போம்” என்றார்.

தொடர்ந்து, “தி.மு.க, அ.தி.மு.க என்னும் திராவிட கட்சிகளை எளிதாக கடந்து விட முடியாது. நாங்கள் எப்போதும் தானே சென்று பேச மாட்டோம். தனித்தும் விடப்பட மாட்டோம். உழைக்கும் மக்கள் உள்ளவரை கம்யூனிஸ்ட்களை தனித்து விட முடியாது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கொள்கைகளை கடைபிடிப்போம். பன்முகத்தை பா.ஜ.க சிதைக்கக் கூடாது என்பது தான் எங்கள் நிலைப்பாடு. இதை தவிர பா.ஜ.க மீது எங்களுக்கு என்ன வெறுப்பு ?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரிடம் அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற சிறப்பை மோடி பெற்றிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 

“முதல் பிரதமர் நேருவை விட அதிக நாட்கள் ஆட்சி பொறுப்பில் இருந்ததாக பிரதமர் மோடியை புகழ்கின்றனர். பாராட்டுகின்றனர். ஆனால் நேருவை வசை பாடுகின்றனர். அவர் தான் நாடு பின்னோக்கி செல்ல காரணம் என சொல்வது சரியல்ல.

பின் தங்கி இருந்த இந்தியாவை, ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் முன்னேற்றமடைய செய்தவர் அவர். விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் போன்றவர்கள் கிடைக்க அடிப்படை காரணமே நேரு தான்” என்றார்.

தொடர்ந்து பேசிய வீரபாண்டியன், “பத்திரிகையாளர்களை முதல்வர் சந்திக்க வேண்டும். ஊடகங்கள் ஜனநாயகத்தின் தூண். எங்களை பொறுத்தவரை நாங்கள் அது குறித்து வலியுறுத்துவோம். அமைச்சர்களை சந்தித்தும் கூறுவோம். ஊடகங்கள் இல்லை என்றால் ஜனநாயகம் பார்வை இழந்து விடும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: