அ.தி.மு.க காலத்து ‘நள்ளிரவு பணி நியமனம்’ விவகாரம்: அதிரடி அப்பீல் மனுவை ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்!
ஒரே நாளில் நேர்காணல், இரவோடு இரவாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்; கோவை மாநகராட்சியின் 69 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்!
கோவை, மாநகராட்சியில் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ‘நள்ளிரவு பணி நியமனத்தை எதிர்த்து , தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டு உள்ளது. இதனால் இரவோடு இரவாக கோவை மாநகராட்சியில் பணி நியமனம் பெற்ற 69 பேர் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சியில் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட 69 நேரடி நியமனங்கள் தொடர்பாக ஈஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு (WA No.286/2023) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் அடங்கிய அமர்வு, மனுதாரர் தரப்பின் மேல்முறையீட்டை அனுமதித்து வழக்கை முடித்து வைத்தது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகராட்சியில் காலியாக இருந்த 103 இளநிலை உதவியாளர் பணி இடங்களில், 34 பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய நிலையில், மீதமுள்ள 69 இடங்களுக்கு நேரடி நியமனம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற நேர்காணலுக்குப் பிறகு, அதே நாளில் நள்ளிரவு நேரத்தில் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக சர்வீஸ் புக்குகளும் தொடங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நியமனங்களில் கல்வித் தகுதி, இடஒதுக்கீடு விதிமுறைகள் மற்றும் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் இந்த நியமனங்கள் தொடர்பான ஆவணங்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் மறுஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டன.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் 69 நேரடி நியமனங்களின் சட்டபூர்வ அனுமதி கேள்விக்குறியாகி உள்ளது? . நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நியமனங்கள் குறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

0 கருத்துகள்: