சேலத்தில் வளைத்துப் பிடிக்கப்பட்ட ஓ.எல்.எக்ஸ் மெகா மோசடி மன்னன் ; கோவை தனிப்படையிடம் ஒப்படைத்த மேச்சேரி ரோந்து போலீஸ் !!!
கோவை அரசு மருத்துவமனையில் கைதிகள் வார்டில் இருந்து தப்பிய ஆந்திராவைச் சேர்ந்த கைதி பிம்முடு அஜித்குமார் என்பவர் சேலத்தில் கைது செய்யப்பட்டார். சேலம் மேச்சேரி ரோந்து போலீசார் அவரை பிடித்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிம்முடு அஜித் குமார். இவர் கார் விற்பனை செய்பவர்களின் தகவலை பெற்று , அதை OLX செயலியில் தனது கார் என்பதை போல பதிவேற்றம் செய்து பல லட்சம் மதிப்புடைய காருக்கு ஒரு சில லட்சங்கள் மட்டும் அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர் மீது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 30 க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளது. ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இவர் உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தப்பினார்.
ஆந்திராவில் இருந்து தப்பிய அவர் , திருப்பூர் மாவட்டத்தில் இதேபோல கார் விற்பனை செய்வது போல இருவரிடம் பணம் பெற்று மோசடி செய்து உள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் பிம்முடு அஜித் குமாரை திருப்பூர் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் கடந்த வாரம் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் உடல்நிலை சரியில்லை என தெரிவித்ததை தொடர்ந்து , கோவை மத்திய சிறையில் இருந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள கைதிகள் வார்டிற்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை கோவை அரசு மருத்துவமனை கைதிகள் வார்டில் இருந்து பிம்முடு அஜித் குமார் தப்பி ஓடினார். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பந்தய சாலை காவல்துறையினர் தலைமறைவான பிம்முடு அஜித் குமாரை தேடி வந்தனர்.
ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய அதே பாணியில் , தமிழக போலீசாரையும் பிம்முடு அஜித்குமார் ஏமாற்றிய நிலையில், உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அருகில் உள்ள மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படை அமைத்து தேர்தல் பணி நடத்தப்பட்டு வந்த நிலையில் அவர் சேலத்திற்கு செல்வது தெரிய வந்தது. இதனிடைய சேலம் மேச்சேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிம்முடு அஜித் குமாரை இன்று அதிகாலை பிடித்தனர். இதனை அடுத்து கோவையில் இருந்து சென்ற கோவை தனிப்படை காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர்.
தப்பி ஓடிய சில மணி நேரங்களிலேயே தமிழக போலீசாரிடம் ஆந்திராவைச் சேர்ந்த பிரபல மோசடி பேர்வழி சிக்கியது குறிப்பிடத்தக்கது....

0 கருத்துகள்: