பொள்ளாச்சியில் ‘குடி’ வெறியில் அண்ணனை குத்திக் கொன்ற தம்பி : கோவை குண்டுவெடிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனைத் விதித்து தீர்ப்பு !!!
லாக்டவுன் சரக்கு தகராறில் அரங்கேறிய கொடூரம்; 5 ஆண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின் ‘கம்பி’யெண்ணும் கொலையாளி!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (45), பெயிண்டர். இவருடைய தம்பி கிருஷ்ணமூர்த்தி (41). இவர்கள் இருவரும் அருகருகே வசித்து வந்தனர். 2 பேருக்குமே மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ந் தேதி கொரோனா காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இருந்தபோதிலும் ஆறுமுகம் அந்தப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்தார். பின்னர் அவர் அந்த மதுவை தனது தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டு வாசல் அருகே அமர்ந்து குடித்து உள்ளார்.
கத்தியால் குத்தினார்
அதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, வீட்டு வாசலில் வைத்து மது குடிக்கிறாயே, வேறு எங்கும் சென்று குடி என்று கூறியதுடன், தனக்கு ஏன் வாங்கி கொடுக்கவில்லை என்றும் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது அண்ணன் என்றும் பார்க்காமல் ஆறுமுகத்தை ஓங்கி மிதித்து உள்ளார்.
இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். பின்னர் அவர் தனது வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து ஆறுமுகத்தின் வயிற்றில் குத்தினார். அதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பரிதாப சாவு
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் கே.கார்த்திகேயன் ஆஜரானார். இந்த வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது.
ஆயுள் தண்டனை
இதை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியை பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

0 கருத்துகள்: