கோவையில் பயங்கரம்: மதுவில் விஷம் கலந்து கொடுத்து மனைவியைக் கொன்ற மீன் வியாபாரி – தந்தை, சித்தப்பாவுடன் சேர்ந்து நொய்யல் ஆற்றில் வீசிய கொடூரம் அம்பலம் !!!
குடிப்பழக்கத்தை நிறுத்தாததால் ஆற்றில் வீசி தற்கொலை நாடகமாடிய கணவர்; ‘பக்கா’ ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கருமத்தம்பட்டி போலீசார் !!!
கோவை அருகே மதுவில் விஷம் கலந்து கொடுத்து பெண்ணை கொன்ற வழக்கில் அவரது கணவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குடிப்பழக்கத்தை நிறுத்தாததால், கொன்றதாக அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அண்ணாநகரை சேர்ந்த மகேஸ்வரி. இவருக்கு திருமணம் ஆகி 10 வயதில் மகன் உள்ளார். மேலும் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் மகேஸ்வரி அதே பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான ஆனந்தகுமார் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
மகேஸ்வரிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அதை விட்டு விடும்படி ஆனந்தகுமார் கூறினார். ஆனால் அவர் கேட்கவில்லை, இதனால் அவரை ஆனந்த குமாரின் தந்தை ஆறுமுகம் வீட்டில் சேர்க்கவில்லை என தெரிகிறது.
இதற்கு இடையே பலமுறை குடிப்பழக்கத்தை கைவிடும் படி ஆனந்தகுமார் கூறியும், மகேஸ்வரி கேட்காததால், அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதனால் ஆனந்தகுமார் மது வாங்கி வந்து அதில் விஷம் கலந்து மகேஸ்வரிக்கு கொடுத்தார். அதைக் குடித்து அவர் உயிரிழந்தார். அவரது உடலை ஆனந்தகுமார், தனது தந்தை ஆறுமுகம், சித்தப்பாவான மற்றொரு ஆனந்தகுமார் உடன் சேர்ந்து சோமனூர் அருகே உள்ள செங்கந்துறை நொய்யல் ஆற்றில் வீசி சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார் விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஆனந்தகுமார், ஆறுமுகம், மற்றொரு ஆனந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட மகேஸ்வரியின் கணவர் ஆனந்தகுமார் அளித்து உள்ள வாக்குமூலம் குறித்து காவல்துறையினர் கூறும் போது ;
மகேஸ்வரிக்கும் தினமும் மது குடிக்கும் பழக்கம் இருந்து. இதை அறிந்த ஆறுமுகம் பெண் மது குடித்தால் குடும்பத்திற்காகாது என்று அவரை வீட்டில் சேர்க்க மாட்டேன் என்றும், மகேஸ்வரி அந்த பழக்கத்தை கைவிட்டால் வீட்டில் சேர்த்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தகுமார் தனது மனைவியிடம் கூறி உள்ளார். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை, அத்துடன் தனக்கு மது வேண்டும் என்று அடிக்கடி கேட்டு உள்ளார். எவ்வளவு சொல்லியும் குடிப்பழக்கத்தை நிறுத்தாததால், ஆனந்த குமாருக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகேஸ்வரியை கொலை செய்து அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாட அவரது உடலை அவரது தந்தை, சித்தப்பா உதவியுடன் நொய்யல் ஆற்றில் வீசி உள்ளார் என்றும் அவர் கூறி உள்ளார்.

0 கருத்துகள்: