தமிழக அரசுக்கு அனுபவம் குறைவு என்றாலும், குதிரை பேரத்தில் வேகமாக செயல்படுவது ஆச்சரியமாக இருக்கிறது - வானதி சீனிவாசன் வியப்பு !!!
மேகதாது அணை விவகாரத்தில் டெல்லி பிரதிநிதி எப்படி ? செயல்படுவார்... கர்நாடக முதலமைச்சரை தமிழக முதலமைச்சர் சந்தித்து பேச தீர்வு காண வேண்டும் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கருத்து !!!
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும், வானதி சீனிவாசன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம், மேகதாது அணை விவகாரம், கோவையின் தற்போதைய குடிநீர் தட்டுப்பாடு மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜின் மறைவு உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து உள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் வானதி சீனிவாசன் பேசியதன் முக்கிய விவரங்கள் :
ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நினைவு தினம் & பா.ஜ.க பயிற்சி முகாம்கள்,
பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் தியாக மறைவு தினமான ஜூன் 23 முதல், அவரது 125-வது பிறந்த தினமான ஜூலை 6-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான இடங்களில் கண்காட்சிகள், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் கருத்தரங்குகளை பா.ஜ.க நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மண்டலம் 28-வது கிளையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்த ஜூன் 23 முதல் அனைத்துத் தொகுதிகளிலும் பா.ஜ.க காரியகர்த்தாக்களுக்கான வருடாந்திர பயிற்சி முகாம்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
கோவையில் குடிநீர் தட்டுப்பாடு – வாட்டர் ஏ.டி.எம் சீரமைப்பு
கோவை பகுதியில் தற்போது தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது; மாநகராட்சியால் வழங்கப்படும் உப்புத் தண்ணீர் கூட சரி வரக் கிடைப்பதில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது ராமநாதபுரம் பகுதியில் அமைத்துக் கொடுத்த 'வாட்டர் ஏடிஎம்' இயந்திரம் தற்போது செயல்படவில்லை எனத் தாய்மார்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அரசு செய்ய வேண்டிய பணி என்றாலும், மக்களின் நலன் கருதி இன்னும் இரண்டு தினங்களில் அந்த இயந்திரம் சொந்த முயற்சியில் சரி செய்து தரப்படும் என்றார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவிற்கு இரங்கல்
கொங்கு மண்டலத்தின் வாழ்வியலையும், பெருமைகளையும் தனது திரைப்படங்களில் நகைச்சுவை கலந்த சிந்தனையோடு அற்புதமாகத் தந்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது மனைவியும் எனது நெருங்கிய தோழியுமான பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பா.ஜ.க சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டெல்லி சிறப்புப் பிரதிநிதி சர்ச்சை மற்றும் மேகதாது விவகாரம்
தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக டெல்லிக்கு நியமிக்கப்பட்டு உள்ள நபர் குறித்து எழுந்து உள்ள விமர்சனங்களுக்கு முதல்வர் விஜய் தான் பதிலளிக்க வேண்டும். நியமிக்கப்பட்ட நபர் தமிழகத்தைச் சாராதவர் என்பது பெரிய விஷயமல்ல, ஆனால் அவருக்குத் தமிழகத்தின் உணர்வுகளோ, மாநிலப் பிரச்சனைகள் குறித்தோ, மத்திய அரசின் திட்டங்களை எப்படி ? இங்கு கொண்டு வர வேண்டும் என்ற அனுபவமோ ? இல்லாததே விமர்சனங்களுக்குக் காரணம்.
அதேபோல், மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது; தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்ட முடியாது என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு அணை கட்ட முயல்கிறது. த.வெ.க கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வர் விஜய், கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி, தங்களது கூட்டணி பலத்தைப் பயன்படுத்தி இந்தத் தண்ணீர்ப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும்.
தி.மு.க கூட்டணி சிதறல் & ‘குதிரை பேர’ அரசியல்
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது கூட்டணியைக் 'கொள்கைக் கூட்டணி' எனப் பெருமையாகப் பேசி வந்த மு.க.ஸ்டாலின், தற்போது ஆட்சியில் அதிகாரம் இல்லை என்றவுடன், அந்தக் கூட்டணி சிதறிப் போய்க் கிடப்பதைக் காண முடிகிறது. இத்தனை மாற்றங்கள் ஏன் ? நடக்கிறது, தங்கள் தலைவர் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா ? என்பதை தி.மு.க தான் யோசிக்க வேண்டும்.
மற்றொருபுறம், மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து, தங்களது சின்னத்தில் நிற்க வைக்கும் 'குதிரை பேர' அரசியலை இந்த அரசு திட்டமிட்டுச் செய்து வருகிறது. இது ஜனநாயக ரீதியிலான செயல்பாடா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
தேர்தல் வரும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யார் ? யார் ? இருப்பார்கள் என்பது தெரியும். இன்றைய தேதியில் இந்தியாவிலேயே மிகவும் வளமான, நிலையான கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தான். தமிழகத்தில் பா.ஜ.க வருங்காலத்தில் அபாரமாக வளரும்.
தேர்வு முறைகேடுகள் & அண்ணாமலையின் புதிய இயக்கம்
எந்தத் தேர்வில் முறைகேடுகள் நடந்தாலும், அதனைத் தடுக்க வலுவான சைபர் செக்யூரிட்டி மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு கட்டமைப்பு அவசியமாகும். தேர்வு ரத்தாகும் போது மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே, கேள்வித்தாள் தயாரிப்பதிலும், ஆன்லைன் தேர்வுகளை நடத்துவதிலும் கூடுதல் பாதுகாப்பு முக்கியத்துவத்தை அரசு கொடுத்தாக வேண்டும்.
அன்புச் சகோதரர் அண்ணாமலை அவர்கள் தனக்கென ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து ஒரு புதிய இயக்கத்தைத் தொடங்கி உள்ளார். அதில் பா.ஜ.க வில் இருந்து சிலர் இணைந்து உள்ளதாகக் கூறப்படும் விவகாரத்திற்கு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே விளக்கம் அளித்து உள்ளார். அந்த அமைப்பின் செயல்பாடுகள் எங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக வரும் பட்சத்தில் மட்டுமே நாங்கள் கருத்து சொல்ல முடியும். தற்போதைக்கு இதில் சொல்வதற்கு ஏதுமில்லை என்று கூறினார் ....

0 கருத்துகள்: