ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் அனுப்பப்பட்டு அண்ணாமலை புதிய அவதாரம்; கி.வீரமணி விமர்சனம் !!!
பா.ஜ.க வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் அனுப்பப்பட்டு அண்ணாமலை புதிய அவதாரத்தை எடுத்து உள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் முன்னாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க தலைவருமான கருணாநிதியின் 103- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கி.வீரமணி, "பா.ஜ.க வின் கொள்கைக்கு மறு உருவமாக அண்ணாமலை கட்சித் தொடங்கி உள்ளார். பா.ஜ.க வால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் அனுப்பப்பட்டு புதிய அவதாரத்தை எடுத்து உள்ளார். திடீரென்று சாட்டையால் அடித்துக் கொள்வார், விவசாயத்தைப் பார்க்கப் போகிறேன் என்று கூறுவார். அரசியலில் ஒதுங்கி விட்டேன் என்று பல நிலைப்பாட்டை எடுத்து உள்ளார். ஆனால் எதிலும் அவர் உறுதியாக இருந்ததில்லை.
அமித்ஷாவின் ஆசிர்வாதத்தால் அனுப்பப்பட்டு உள்ள ஒருமாய மான் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பா.ஜ.க செல்வாக்கு இழந்து உள்ளதால் பழைய சரக்கிள் லேபிள் மாற்றி தற்போது அண்ணாமலையை வைத்து கட்சி தொடங்கி உள்ளனர். பா.ஜ.க வில் இருந்த ஒரு பிரிவினர் அண்ணாமலையின் புதிய கட்சியில் இணைந்து உள்ளனர். தவிர இளைஞர்கள் யாரும் அவர் கட்சியில் இணையவில்லை. சட்டம்- ஒழுங்கை காரணம் காட்டி த.வெ.க ஆட்சி அமைத்தனர். ஆனால் தற்போது சட்டம்- ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்க்கேட்டு வருகிறது. திட்டங்களை செயல்படுத்த அவகாசம் கேட்கும் முதலமைச்சர், சட்டம்- ஒழுங்கை சரிசெய்ய அவகாசம் கேட்கக் கூடாது.
முதலமைச்சர் விஜய் அப்போது கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தீர்கள்; இப்போது பதில் சொல்லக் கூடிய இடத்தில் இருக்கும் நீங்கள், இப்போதும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கக் கூடாது" என்றார்.
கலைஞர் விசுவாசிகள் தவெகவிற்கு வரலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு விடுத்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
"கலைஞர் விசுவாசிகளுக்கு தடுமாற்றம் இருக்காது அப்படி தடுமாற்றம் இருந்தால் அவர்கள் கலைஞரின் விசுவாசிகளே இல்லை" எனத் தெரிவித்து உள்ளார்.
பா.ஜ.க வில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்து 'We The Leaders' என்ற அமைப்பை இணையதளத்தை அறிமுகம் செய்து இருந்தார். தற்போது வரை இந்த அமைப்பில் 15.65 லட்சம் பேர் தங்களை உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: