கோவை, சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ; சிறையில் நடந்த அடையாள அணி வகுப்பில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சாட்சிகள் - நீதிபதி முன்னிலையில் நடந்தது !!!
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் கிராமத்தில் ஏழை தம்பதிக்கு பிறந்த 10 வயது சிறுமி கடந்த 21 ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 33) என்பவரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் கார்த்திக் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் போலீசார் பிடிக்கும் என்ற போது தப்பிக்க முயன்ற கார்த்திக் காலில் அடிபட்டதால் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பிறகு சிகிச்சை முடிந்து கடந்த 27 ஆம் தேதி மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு அவரை கடந்த 30 ஆம் தேதி மத்திய சிறைச்சாலையில் இருந்த மற்ற கைதிகள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் ஆத்திரம் அடைந்து கார்த்திகை தாக்கினர்.
இதனால் மேலும் காயம் அடைந்த கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு 31 ஆம் தேதி மீண்டும் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாலியல் வழக்கில் கைதான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ள சாட்சிகள் அடையாளம் காட்டும் பணி நேற்று மாலை நடந்தது.
அப்போது சிறைச்சாலையில் உள்ள அறையில் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் பிற கைதிகளுடன் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்களை கண்ணம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 2 சாட்சிகள் நீதிபதியிடம் அடையாளம் காட்டினர்.
அதாவது சம்பவத்தன்று 21 ஆம் தேதி கார்த்திக் சிறுமியை அவரது வீட்டு முன்பு இன்று விளையாடிக் கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் சாக்லேட் கொடுத்து ஏற்றி சென்றதை ஒருவர் பார்த்து உள்ளார். அதேபோன்று வழியில் சிறுமியை மோட்டார் சைக்கிளில் அமர வைத்துக் கொண்டு கார்த்திக் செல்வதை மற்றொருவரும் பார்த்து உள்ளார்..
சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் அவரை கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று உள்ளார்.. இதுகுறித்து மற்றொரு சாட்சி நீதிபதியிடம் அவரை அடையாளம் காட்டி உள்ளார்.
இந்த குற்றவாளிகள் அடையாளம் காட்டும் பணி மத்திய சிறையில் ரகசியமாக நடந்தது. இதன் அறிக்கையை நீதிபதி போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இதற்கு இடையே கோவை மத்திய சிறையில் உள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோரை வழக்கு மேல் விசாரணைக்காக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று அல்லது நாளை சூலூர் போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் சூலூர் போலீசார் இதை வழக்கில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

0 கருத்துகள்: