சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப் பதிவு - தமிழக அரசு அறிவிப்பு !!!
பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலம் செல்லாமலேயே இனி பத்திரப் பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
ஆவணப் பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாக பதிவுத் துறையில் 'வருகை இல்லா ஆவணப் பதிவு' (Anywhere Registration) திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆகையால், இனி பொதுமக்கள் ஆவணத்தைப் பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டும் என்கிற நிலை மாற உள்ளது.
மேலும், இணையத்தின் வாயிலாகவே எந்நேரமும், எங்கு இருந்தும் தங்களின் ஆவணங்களை பொதுமக்களால் பதிவு செய்து கொள்ள முடியும். இணையம் வாயிலாக சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு சார் பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அந்த ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் பதிவுத் துறை கணக்கில் சேர்க்கப்படும்.
அதை அவரால் எப்போது வேண்டுமானலும் கணக்கில் உள்நுழைந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அத்துடன், சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண் மற்றும் வாட்ஸ்-ஆப் செயலிக்கும் குறிப்பிட்ட ஆவணம் அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு பதிவுத் துறை தெரிவித்து உள்ளது.
இதன்படி, முதல் விற்பனை மனை (First sale of Plot), முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First sale of Flat), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் மற்றும் வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே பொதுமக்களால் இணையம் வாயிலாக பதிவு செய்து கொள்ள முடியும்.
இதேபோல், பதிவு செய்ய விரும்பும் பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் வங்கிகளுக்கும் குறிப்பிட்ட சில வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வழங்கி உள்ளது.
அதாவது, ஆவணங்களைப் பதிவுச் செய்ய விரும்புபவர் முதலில் பதிவுத் துறை இணையதளத்தில் தங்களுக்கான உள்நுழைவை (கணக்கை) தாங்களே உருவாக்கி, ஆவணங்களை (ரசீது) இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவரின் ஆதார் அட்டையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அத்துடன், ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் சரிபார்க்கப்பட வேண்டும் என்கிற வழிக்காட்டுதல்களையே அது வழங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு பதிவுத் துறையின் இந்த சேவையைப் பெற தடையில்லா இணைய இணைப்பு வசதி, விரல் ரேகை கண்டறியும் இயந்திரம், கருவிழிப்படலத்தைக் கண்டறியும் கருவி மற்றும் புகைப்படக் கருவி (Webcam) ஆகியவை தேவைப்படுகிறது.

0 கருத்துகள்: