திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு !!!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளன.
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நடைமுறைபடியே தீபம் ஏற்றப்படும் என்று மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்து இருந்தார். அதாவது, கார்த்திகை தீபத்தின் போது திருப்பரங்குன்றம் மலையின் மீது உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் தற்போது வரை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தனது நிலைபாட்டை வரும் ஜூன் 22- ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, கடந்த ஜூன் 04- ஆம் தேதி உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை இப்போதும், வரும் காலத்திலும் உறுதியோடு முன்னெடுக்க வேண்டும்.
வலதுசாரிகள் மற்றும் வலதுசாரி சார்புடைய நீதியரசர்களின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் சட்ட ஒழுங்கையும், மதச்சார்பற்ற கொள்கை நிலையில், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசியலமைப்பு சார்ந்த கடமையாகும். இதன் அடிப்படையில் திருப்பரங்குன்றத்தில் சிக்கத்தர் தர்கா அருகில் உள்ள சர்வே தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஜூன் 05- ஆம் தேதி அன்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் " திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியைத் தான் விரும்புகின்றனர். எனவே, இங்கு கடந்த காலங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலையே தொடரும். இதுவே மக்கள் விருப்பம். இந்த விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அரசு அனுமதிக்காது" என தமிழ்நாடு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மதுரை அருகே செய்தியாளர்களிடம் தெளிவுபடுத்தி இருப்பது வரவேற்பிற்குரியது.
இப்பிரச்சினையில், தமிழ்நாடு அரசு கடந்த காலத்தில் மேற்கொண்ட சரியான நிலையை உறுதியோடு தொடரவேண்டும். மதச்சார்பற்ற கொள்கையை உறுதியோடு கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: