தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜிநாமா !!!
தமிழக சட்டப் பேரவையின் செயலாளர் சீனிவாசன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம், பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதை அடுத்து, அமைச்சரவை இரண்டு முறை விரிவாக்கம் செய்யப்பட்டு, முழுமையான அமைச்சரவையாக தற்போது உள்ளது.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான், தமிழக சட்டப் பேரவை செயலாளராக பணியாற்றி வந்த சீனிவாசன் தனது பதவியை ராஜிநாமா செய்து உள்ளார். 2018-ஆம் ஆண்டு சட்டமன்ற செயலகத்தின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்ட சீனிவாசன், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பும் அதே பதவியில், பதவி நீட்டிப்பு பெற்று தொடர்ந்தார்.
சட்டப்பேரவை செயலகம் தொடர்பான பணிகளில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதோடு முதலமைச்சர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவராகவும் சீனிவாசன் அறியப்பட்டார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க ஆட்சி அமைத்த பிறகும் சட்டப்பேரவைச் செயலாளராக அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்து, பதவி விலகல் கடிதத்தை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் வழங்கி உள்ளார்.
த.வெ.க அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அ.தி.மு.க வினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்களித்தனர். த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாரகரை சந்தித்து மனு அளித்து இருந்தது.
இதற்கு இடையே, எஸ்.பி.வேலுமணி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இந்த முக்கியமான அரசியல் நிகழ்வுகளில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் பங்கு முக்கியமானதாக இருந்தது.
அ.தி.மு.க, தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் சட்டப்பேரவைச் செயலாளராக பணியாற்றிய சீனிவாசனுக்கு வரும் நவம்பர் மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் அதற்கு முன்பாகவே தனது பணியை விட்டு விலகி உள்ளார்.
அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் சாந்தி, அடுத்த சட்டப்பேரவை செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பேரவை செயலாளர் உடைய ஆலோசனைகளை கேட்காமல், சபாநாயகர் தன்னிச்சையாக முடிவெடுப்பது உள்ளிட்டவை தான் சீனிவாசன் ராஜினாமாவிற்கு காரணம் என சட்டப்பேரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்: