புதன், 3 ஜூன், 2026

தமிழக முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் சந்திப்பு !!!

SHARE

 தமிழக முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் சந்திப்பு !!!

தமிழக முதல்வர் விஜய்யை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமைச் செயலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்தன.

காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை நிர்வாகிகளின் கோரிக்கை தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைய வேண்டும் என்று இருந்த போதிலும், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் முயற்சியால் தமிழக காங்கிரஸ் தி.மு.க வுடன் கூட்டணி வைத்தது. இவ்வாறு தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு முக்கிய பாலமாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முதலமைச்சர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இருவரும் விவாதித்து இருப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், மாநிலங்களவை இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டு இருக்கலாம் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த தி.மு.க, எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த அ.தி.மு.க என இரண்டு பெரிய கட்சிகளை வீழ்த்தி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது.

அந்த வகையில், த.வெ.க மட்டும் 108 இடங்களில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட த.வெ.க தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.க வை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து விஜய் கடிதம் கொடுத்தார்.

ஆனால், பெரும்பான்மை பலத்தை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. இந்த சூழலில், 118 உறுப்பினர்கள் பலத்தை நிரூபிக்க தி.மு.க கூட்டணி கட்சிகளை த.வெ.க நாடியது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தி.மு.க கூட்டணியில் இருந்து விலகி, த.வெ.க வுக்கு ஆதரவு அளித்தது.

தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளும் த.வெ.க வுக்கு ஆதரவு கொடுத்தன. இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை அமைச்சரவையில் இடம் பெற்றன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: