திங்கள், 1 ஜூன், 2026

தேர்தல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட அ.தி.மு.க தொண்டர் : எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி !!!

SHARE

 தேர்தல் தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட அ.தி.மு.க தொண்டர் : எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி !!!

தேர்தல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளான அ.தி.மு.க தொண்டர் மகேந்திரன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரின் உடலுக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

​தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் உப்புகாரத் தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அ.தி.மு.க தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக பணியாற்றி வந்தார். இவர் சமீபகாலமாக அ.தி.மு.க வில் ஏற்பட்டு உள்ள பிளவுகள் மற்றும் கடந்த தேர்தல் முடிவுகள் ஆகியவற்றால் கடுமையான மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அ.தி.மு.க தேர்தல் தோல்வியால் மன உளைச்சல் ஏற்பட்டதால் உயிரை மாய்த்து கொள்வதாக கூறி முகநூலில் ஒரு காணொளியை இவர் வெளியிட்டார். அதன் பின்னர் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று (ஜூன் 1) இரவு சுமார் 9 மணி அளவில் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதி கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதனை அடுத்து, இந்த தகவல் அறிந்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ள மறைந்த மகேந்திரன் உடலுக்கு கண்ணீர் மல்க நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க சார்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.55 லட்சம் நிதி உதவியையும், குழந்தையின் கல்வி கல்விப் பொறுப்பையும் ஏற்பதாக அறிவித்தார். ​அதன்படி, பாதிக்கப்பட்ட மகேந்திரனின் குடும்பத்திற்கு அ.தி.மு.க தலைமைச் சார்பில் 30 லட்சம் ரூபாயும், தஞ்சாவூர் மாவட்ட கழகத்தின் சார்பில் 25 லட்சம் ரூபாயும் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

மறைந்த மகேந்திரனின் ஒன்றரை வயது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அக்குழந்தையின் பள்ளிப் படிப்பின் துவக்கம் முதல் கல்லூரிப் படிப்பு முடியும் வரை முழு கல்விச் செலவையும் கழகமே முழுமையாக ஏற்கும் எனவும் உறுதி அளித்து உள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “என் உயிருக்கு உயிரான கழக உடன்பிறப்புகளே… தயவு செய்து பொறுமையாக இருங்கள். எந்த ஒரு தவறான முடிவையும் எடுத்து விடாதீர்கள். எத்தனையோ சோதனைகளை, சூழ்ச்சிகளை நாம் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெற்று உள்ளோம். “அஞ்சுவது யாதொன்றுமில்லை; அஞ்ச வருவதுமில்லை” என்ற ஜெயலலிதாவின் பொன்மொழியை நெஞ்சில் ஏந்தி முன்நோக்கி செல்ல வேண்டிய நேரம் இது. அன்புத் தம்பி K.S. மகேந்திரன் தியாக உணர்வு கழகத்தின் ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு.

ஆனால், அதை நாம் களத்தில், நமது செயலில் காட்டுவோம். நெருப்பாற்றில் எதிர்நீச்சல் அடித்தே வெற்றிக் கரை கண்ட இயக்கம் இது. அதனால், எதையும் வென்ற நாம், இந்த சூழலையும் வெல்வோம்! தன் இறுதி மூச்சு வரை கழகத்தையே சுவாசித்து நேசித்த மாவீரன் K.S. மகேந்திரன் நினைவாக, அனைத்து கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்களிலும் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திட வேண்டுமென அனைத்து மாவட்டக் கழகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: