திங்கள், 1 ஜூன், 2026

இரும்பு மேற்கூரை விழுந்து வட மாநில தொழிலாளர் உயிரிழப்பு : ஐ.பி.எல் போட்டியை பார்த்த போது சோகம் !!!

SHARE

 இரும்பு மேற்கூரை விழுந்து வட மாநில தொழிலாளர் உயிரிழப்பு : ஐ.பி.எல் போட்டியை பார்த்த போது சோகம் !!!

ஐ.பி.எல் இறுதிப் போட்டியை பார்த்துக் கொண்டு இருந்த போது, இரும்பு மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வட மாநிலத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; மற்றொரு தொழிலாளி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கோர விபத்தில் 35 பேர் படுகாயம் அடைந்த நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராமாபுரத்தை அடுத்த சாந்தி நகர் பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்காக 8 இரும்பு ஷெட்டுகள் போடப்பட்டு தங்குமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு (மே 31) 35 வட மாநில தொழிலாளர்கள் ஒன்றாக அமர்ந்து ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்த்து வந்து உள்ளனர்.

அப்போது திடீரென இரும்பு மேற்கூரை அவர்கள் மீது சரிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 35 தொழிலாளர்களும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மவுண்ட் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 35 தொழிலாளர்களும் ஆம்புலன்ஸ் மூலம் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 23 பேர் கலைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தலையில் காயம் ஏற்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த பிரிஜ்சு மான்சி (52), என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். மேலும், கொல்கத்தாவை சேர்ந்த சுகானி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நந்தம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வட மாநில தொழிலாளர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட பகுதி, போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டதா ? இரும்பு மேற்கூரை கீழே விழும் அளவுக்கு பலவீனமாக இருக்க என்ன காரணம் ? இந்த தங்கும் இடத்தை கட்டிய கான்ட்ராக்டர் யார் ? தொழிலாளர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: