வியாழன், 11 ஜூன், 2026

அனைத்து முதலமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தது வரவேற்கத்தக்கது- பிரவீன் சக்கரவர்த்தி !!!

SHARE

 அனைத்து முதலமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தது வரவேற்கத்தக்கது- பிரவீன் சக்கரவர்த்தி !!!

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது வரவேற்கத்தக்கது என்று பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு இடத்திற்கான மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்த பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்டார். இதை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் இருந்து வெற்றி சான்றிதழை பிரவீன் சக்கரவர்த்தி பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வின் போது பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பிரவீன் சக்கரவர்த்தி வரும் 2028-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருப்பார். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரவீன் சக்கரவர்த்திக்கு கிரீடம் அணிவித்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரவீன் சக்கரவர்த்தி,

 "தற்போது தான் தமிழ்நாட்டின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது பெரிய பொறுப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாடு மாநிலத்திற்கும், காங்கிரஸ் - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி ஆட்சியில் சார்பாக பாராளுமன்றத்தில் எனது குரல் ஒலிக்கும்.

இந்திய மாநிலங்களவைக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி உடனான கூட்டணியின் முதல் பிரதிநிதியாக தான் செல்கிறேன். இதனால் நான் மிகவும் பெருமை அடைந்து உள்ளேன்.

இது மிகப் பெரிய பொறுப்பு என உணர்ந்து செயல்படுவேன். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடந்து வருவது குறித்து தற்போதைய தகவல் தெரியாது.

அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது வரவேற்கத்தக்கது. 12 ஆண்டுகளாக இதை தவற விட்டவர், இப்போது அதை பிரதமர் நரேந்திர மோடி உணர்ந்து உள்ளார் என்றால் அது வரவேற்கத்தக்கது தான்" என தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: