அரசு மகளிர் பஸ் பெண் நடத்துனரிடம் ஆபாச அநாகரீகம்! காலரைப் பிடித்து இழுத்து மிரட்டிய தனியார் பஸ் நடத்துனர் கைது !!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா, செக்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 32). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பெண் பயணிகளுக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வருகிறார்.
நேற்று மாலை சித்ரா பணியில் இருந்த அரசு பேருந்து அவினாசி ரோடு, ராமநாதபுரம் சிறுநீரக மைய பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களுக்குப் பின்னால் வந்த தனியார் பேருந்தின் நடத்துனரான அப்துல் சலாம் (வயது 42) என்பவர், அரசு பேருந்து தாமதமாகச் செல்வதால் தங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கவில்லை எனக் கூறி அரசு பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார்.
தனியார் பஸ் நடத்துனர் அப்துல் சலாம், நடுரோட்டில் அரசு பேருந்துக்குள் புகுந்து பெண் நடத்துனர் சித்ராவை நோக்கி ஆபாச வார்த்தைகளை பேசினார். மேலும் பொதுமக்களின் முன்னிலையில் சித்ராவின் சட்டைக் காலரைப் பிடித்து பலவந்தமாக இழுத்து, பஸ்சில் இருந்து கீழே தள்ள முயன்றார். "இனிமேல் இந்த டைமிங்கில் பஸ்சை ஓட்டினால் கொலை செய்து விடுவேன்" என மிரட்டி, அவரை அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்தார்.
இதுகுறித்து சித்ரா ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனியார் பஸ் நடத்துனர் அப்துல் சலாமை கைது செய்தனர்.

0 கருத்துகள்: